Tuesday, July 6, 2010

சிவக்குமாரின் ஆதங்கமும் விடுதலை தலையங்கமும்



கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருத்தரங்கங்களும், ஆய்வரங்கங்களும், கவியரங்கங்களும், பட்டிமன்றங்களும் நடைபெற்றன. பெருந்திரளாகக் கூடிப் பொது மக்கள் அவற்றை ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக, மாநாட்டு நிறைவு விழா அன்று( 27.6.2010 ) முற்பகல் நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற ‘வித்தாக விளங்கும் தமிழர்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் சிவக்குமார் அவர்களின் உரையும் முத்தாய்ப்பாகவே ஒலித்தது.

நான், கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், கோவிலுக்குச் செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில்,அதைக் கட்டிய மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் குடமுழுக்கின்போது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் சாமி சிலையைச் செதுக்கிய சிற்பியும்கூட வெளியிலேயே நிற்கும் நிலைதான்.

இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான்.

ஆனால், எல்லா நடைமுறைகளையும் கடைபிடித்து நடந்து வரும் அப்பாவி பக்தன், 2 நாள் காத்திருந்து சாமி கும்பிடுகிறான். இதன் பெயர் சாமி தரிசனமாம். இதனால்தான் கோவிலுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை.

தந்தை பெரியாரும், கோவிலையும், சாமியையும் வெறுத்தார். தனது 95 வயதிலும் மூத்திரக் குழாய் வழியும் நிலையில்கூட உழைத்தார். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று நடிகர் சிவக்குமார் ஓர் அருமையான கருத்தை சொல்ல வேண்டிய இடத்தில் மிக அழுத்தமாகவே பதிவு செய்தார்.

மொழி மனிதனுக்காகத்தான். தமிழ் பேசும் தமிழரின் அவல நிலையைத்தான் நடிகர் சிவக்குமார் எடுத்துரைத்தார். அவர் கூறியதில் ஓர் எழுத்தைக்கூட மறுக்க முடியாது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களோ, தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களோ இந்தக் கருத்தைச் சொல்லும்பொழுது அதற்கு வேறு வண்ணம் தீட்டக்கூடும். ஆனால், சொல்லியிருப்பவரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கோவிலில் வழிபாட்டு மொழி குறித்தும், அர்ச்சகர் பிரச்சினை குறித்தும் பேசலாமா? என்று கேள்வி கேட்கும் சில மேதாவிலாசங்கள் உண்டு.

பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய அதே வினாவை ஆன்மிகவாதியான ஒருவரே எழுப்பியிருக்கிறாரோ, இதற்குப் பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டு இருக்கவில்லையா?

நடுநிலையில் இருந்து தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைச் சிந்திக்கும் எவரும் உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசையான, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்தும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம் இயற்றி இருந்தும்கூட, அதன் அடிப்படையில், அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆணை பிறப்பிக்கும் நிலையில், மீண்டும் உயர்ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்றால், இதுபற்றி கடவுள் நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நடிகர் சிவக்குமார் அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார் என்றாலும், அதற்குள் புதைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைக்கும், கோவிலுக்குள் மூல விக்கிரத்தின் அருகில் சென்று அர்ச்சனை செய்வதற்கோ, வழிபடுவதற்கோ முட்டுக்கட்டை போடுபவர்கள் பார்ப்பனர்கள் என்பதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லத் தயக்கம் ஏன்?

நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சினையில் மனித உரிமையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு அளிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்? என்பதெல்லாம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள்.

இதில், காலம் மேலும் மேலும் கடத்தப்படுமேயானால், நேரடியாகவே கருவறைக்குள் நுழையும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனை யார்தான் தடுக்க முடியும்?

நன்றி: ’’விடுதலை” தலையங்கம் (28-6-2010 )

No comments: