போருக்குப் பின்னான இனநல்லிணக்கத்தினைப் பாதிக்கும் வகையில் தமிழர் தாயக நிலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவக் குடியேற்றங்கள் என வடக்கில் தொடரும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடவல்லது என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 'லக்பிம நியூஸ்' [lakbimanews] என்ற ஆங்கில இணையத்தளத்திற்காக 'ரங்க ஜெயசூரிய' எழுதியுள்ள செய்தி ஆய்வினை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.
போருக்குப் பின்னான இனநல்லிணக்கத்தினைப் பாதிக்கும் வகையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான கசப்புணர்வுகள் தொடர்கின்றன.
குறிப்பாக, உயர் பாதுகாப்பு வலங்கள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், இதுபோன்ற வலயங்கள் தொடர்ந்தும் பேணப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹெல்லிய ரம்புக்வெல கூறியிருப்பதானது இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் மத்தியில் தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்பான நம்பிக்கையினை இல்லாது செய்திருக்கிறது.
இராணுவத்தினர் படைத்தளங்களை அமைத்திருக்கும் தங்களது நிலங்களில் சென்று மீள்குடியேறுவதற்கு வழிசெய்யப்படவேண்டும் என இந்த மாதத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சியில் அமைச்சரவை கூடியபோது அங்கு சென்றிருந்த அதிபர் ராஜபக்சவிடம் 2000 வரையிலான குடும்பங்கள் தங்களது மனுவினைக் கையளித்திருந்தார்கள்.
முருகண்டி மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருக்கான புதிய படைத்தளங்களை அமைப்பதற்காக 4,000 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படையினர் தமக்காக எடுத்திருக்கும் மூன்று கிராமங்களையும் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வசித்து வருகிறார்கள்.
இவர்களது மனுவினை ஏற்றுக்கொண்ட அதிபர் ராஜபக்ச கூடியவிரைவில் இவர்கள் அனைவரும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என உறுதியளித்திருந்தபோதும் இந்த மக்கள் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வசித்து வருகிறார்கள்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 'படையினரின் செறிவு' தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் புதிய பாதுகாப்பு மூலோபாயத்தினைக் கைக்கொண்டிருக்கிறது.
இந்தப் புதிய மூலோபாயத்தின் அடிப்படையில், தற்போது பலாலியில் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படைத் தலைமையகம், காங்கேசன்துறைத் துறைமுகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட கடற்படைத் தலைமையம் மற்றும் பலாலி விமான ஓடுதளத்தினை அண்டியதாகவுள்ள மாவட்ட வான்படைத் தலைமையகம் என்பன 'யாழ்ப்பாண பாதுகாப்பு வளாகம்' என அழைக்கப்படும் ஓரிடத்தில் ஒன்றிணைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
பலாலி விமான ஓடுதளத்தில் பொதுமக்கள் போக்குவரவினை அதிகரிக்கும் செயல்திட்டமும் இதற்குள் அடங்கும்.
இந்த ஓடுதளத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கான நிதியினை இந்தியா வழங்கவுள்ளது.
இந்தத் திட்டமானது, "குடாநாட்டுக்கு வான் வழியாக வர விரும்பும் எவரும் விமானப் பயணச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு இலகுவாக வந்துசெல்வதற்கு வழிசெயும்" என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான ஓடுதளத்திற்குப் பொதுமக்கள் இலகுவாக வந்துசெல்வதற்கு ஏதுவாக தெல்லிப்பளை ஊடானதொரு வழி ஏற்படுத்தப்படும். தற்போது உயர் பாதுகாப்பு வலயங்கள் ஊடாகவே பொதுமக்கள் ஓடுதளத்திற்கு வந்துசெல்வது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறிருப்பினும் இந்தப் புதிய இராணுவத் திட்டத்திற்காக காங்கேசன்துறைப் பகுதியில் மேலுமதிக நிலங்களைப் படையினர் பெறுவது அவசியமாகிறது.
ஆனால், படையினர் பொதுமக்களின் நிலங்களை இவ்வாறு பெறுவது தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களின் அளவு வேகமாகக் குறைந்து செல்வதாகவும் வரும் நாட்களில் தெல்லிப்பளை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்குள் மாத்திரமே உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கும் என்றும் இராணுவத்தினர் கூறுகிறார்கள்.
குடாநாட்டில் படைக்கட்டுமானங்கள் விரிவடைந்து செல்வதன் விளைவாக இந்தப் பிராந்தியத்தினது குடிப்பரம்பலில் வேகமான மாற்றம் ஏற்படுவது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நாட்டினது வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில் நிரந்தரப் படைத்தளங்கள் அமைக்கப்படும் என்றும் படையினரது குடும்பங்களையும் அவர்கள் பணிசெய்யும் இடத்திற்கு அருகே குடியமர்த்தும் வகையில் விடுதிகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்றும் மல்வத்த மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் பின்னர் இராணுவத்தளபதி கூறியிருந்த கருத்தினை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் நினைவு படுத்துகிறார்.
குடிப்பரம்பல்
"வடக்குக் கிழக்கில் 100,000 படையினர் நிலைகொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படையினர் அனைவரும் தங்களது துணைவிமார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வன்னியில் வந்து குடியேறுமிடத்து இந்தத் தொகை 400,000 ஆக அதிகரிக்கும்.
இது வடக்கினது குடிப்பரம்பலை ஒரேநாளில் மாற்றிவிடும்" என பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
"இதன் விளைவாக தமிழர்கள் தங்களது பிரதிநிதித்துவத்தினை இழக்கும் நிலை தோன்றும்" என்கிறார் அவர்.
சிங்களக் குடியேங்றங்கள் ஊடாக நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியினது குடிப்பரம்பல் மாறிவிட்டது எனக்கூறியே அப்போது தமிழ் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.
இந்த எண்ணத்தின் விளைவாகவே சிங்களவர்கள் புதிதாகக் குடியேறிய இதுபோன்ற விவசாயக் கிராமங்களில் விடுதலைப் புலிகள் சிங்கள மக்களைப் படுகொலை செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்த புராதன புத்த கோவில்களைப் புனரமைக்கும் பணிகளும் சந்தேகக்கண் கொண்டே பார்க்கப்படுகிறது.
ஆனால், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஏ-9 வீதி வழியாகப் பயணித்திருந்த இந்தப் பத்தியாளர் தமிழ் ஊடகங்கள் குற்றம் சுமத்துவதைப் போல பௌத்த செல்வாக்கு அங்கு அதிகமாகியிருப்பதற்கான அந்த ஆதாரங்களையும் காணவில்லை.
நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதி தமிழர்களின் தனித்துவமான தாயகம் என வாதிட்டுவரும் தமிழர் தரப்பினரர் மத்தியில் இதுபோன்ற பௌத்த ஆலயங்கள் நிர்மானிப்பதற்கு எதிரான எதிர்ப்பு அதிகம் காணப்படும் நிலையில், தமிழர்கள் மத்தியில் நிலவும் இதுபோன்ற கசப்புணர்வு விளங்கிக்கொள்ளக் கூடியது.
எவ்வாறிருப்பினும், தமிழர்கள் மத்தியில் நிலவுகின்ற இதுபோன்ற எண்ணங்கள் போருக்குப்பின்னான யதார்த்தத்தினைப் புரிந்துகொண்டு அவர்கள் செயற்படுவதற்கு உதவுமா அல்லது இல்லையா என்பது கேள்விக்கிடமானதே.
சிறிலங்கா அரசாங்கமானது நீண்டகால பாதுகாப்பு மூலோபாயத்தினை வகுத்திருக்கிறது.
இதன் அடிப்படையில் நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் படையினர் தொடந்தும் நிலைகொண்டிருப்பதோடு அவர்களுக்காக நிரந்தரப் படைத்தளங்கள் நிர்மாணிக்கப்படும்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு ரீதியிலான சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையிலேயே இதுபோன்ற முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆரம்பத்தில் சிறு சிறு தாக்குதல்களை நடாத்திய தமிழ் ஆயுதக் குழுக்கள் பின்னர் படிப்படியான வளர்ச்சியைக் கண்டதோடு, வடக்குக் கிழக்கில் அமைந்திருந்த இராணுவ மற்றும் காவல் நிலைகளைத் தாக்கி நிர்மூலமாக்கவல்ல அரை மரபு இராணுவமாக மாற்றம் கண்டிருந்தது.
1980களில் இராணுவத்தினர் மீது தொடரான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களது செயற்பாடுகளைக் குழப்பிய விடுதலைப் புலிகள் தங்களுக்கான பின்தளங்களைக் கொண்டிருந்ததோடு இளைஞர்களைப் படைக்குத் திரட்டி அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியதுடன், கெரில்லாப் பாணியிலமைந்த தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
கடந்த காலத்தில் அரச படையினர் விட்ட தவறுகளிலிருந்து பாடம் கற்றிருப்பதாகவே தெரிகிறது. எவ்வாறிருப்பினும், வடக்குக் கிழக்கில் நிரந்தரப் படைமுகாம்களை அமைக்கும் தற்போதைய திட்டம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் எண்ணத்தினை விட ஒன்றும் புதிதல்ல.
சிறிலங்காவினது இராணுவத்தினை 400,000ஆக உயர்த்துவதற்குத் திட்டமிட்டிருந்த சரத் பொன்சேகா வடக்குக் கிழக்கில் கிராமங்கள் தோறும் படை முகாம்களை ஏற்படுத்தும் எண்ணத்தில் இருந்திருக்கிறார்.
பாதுகாப்புத் தொடர்பான கரிசனைகளுக்கு அப்பால், அங்கு நிலைகொண்டிருக்கும் படையினருக்கான பின்தள வழங்கல் பணிகளுக்காக வடக்கில் நிரந்தரப் படை முகாம்களை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகிறது.
சிறிலங்கா இராணுவத்தின் தொகை 200,000 ஆக அதிகரித்திருக்கிறது. அத்துடன் பிற துணைக் கிளைகள் ஏனைய படையணிகள் உள்ளடங்கலாக மொத்தமாக 300,000 பேர் முப்படைகளிலும் இருக்கிறார்கள்.
பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையினைக் குறைப்பதற்கான சாத்தியத்தினைச் சிறிலங்கா அரசாங்கம் முற்றாக மறுதலித்திருக்கும் நிலையில், அனைத்துப் படைப்பிரிவுகளையும் உள்வாங்குவதற்காக வடக்கில் நிரந்தரப் படைநிலைகள் அமைக்கப்படுவது அவசியமானது.
கடந்த வியாழனன்று 68ஆவது படைப்பிரிவின் நிரந்தரத் தலைமையகம் புதுக்குடியிருப்பு உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள சுதந்திரபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இதனைத் திறந்துவைத்திருக்கிறார்.
தற்போது அரச படையினர் ஆக்கிரமித்திருக்கும் தனியார் மற்றும் பொதுக்கட்டடங்களிலிருந்து வெளியேறி மீள்குடியேற்றத்தினைத் துரிதப்படுத்தும் வகையிலேயே நிரந்தரப்படைக்கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அங்கு உரையாற்றிய ஜெயசூரிய கூறுகிறார்.
"சீனா வழங்கிய புதிய தொழிநுட்பத்துடன் கூடிய உதவிகளின் பயனாகவே இதுபோன்ற நிரந்தரப் படைத்தளங்களை அமைப்பது சாத்தியமாகியது.
வன்னிப் பகுதியில் இயல்புநிலையினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக மக்கள் தங்களது சொந்தக் காணிகளுக்குத் திரும்பும் வகையில் பொதுக்கட்டடங்கள், பொதுமக்களுக்குச் சொந்தமான கட்டடங்களிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் எங்களைக் கோரியிருக்கிறது"
"இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் இயல்புநிலை தோன்றவேண்டும்.
அதற்கான வழிவகைகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
எதிர்காலத்தில் திருமணம் செய்ய படை அதிகாரிகள் மற்றும் படையினரின் நலன்கருதி அவர்கள் பணிசெய்யும் பகுதிகளில் அவர்களுக்கான விடுதிகள் அமைத்துக்கொடுக்கப்படும்" என்றார் இராணுவத் தளபதி.
சிறிலங்கா அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயங்களைத் தொடர்ந்தும் பேணுவதற்கே விரும்புகிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.
இருப்பினும், இதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த பொதுமக்களுடன் தொடர்புடைய விடயங்களைக் கையாழும் உயர் இராணுவ அதிகாரிகள் உயர் பாதுகாப்பு வலயங்களின் அளவு வேகமாகச் சுருங்கி வருகிறது என கூறுகிறார்கள்.
"நாகேஸ்வரன் கோவில், தெல்லிப்பளை அரசினர் வைத்தியசாலை, மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றை நாங்கள் பொதுமக்களிடம் கையளித்திருக்கிறோம்" எனக் கூறினார் ஒரு அதிகாரி.
"ஞானம் விடுதி கடந்த வாரம் அதனது உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சுபாஸ் விடுதி இரண்டு மாத காலத்திற்குள் அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்படும்" என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த 160 பொதுமக்களின் சொத்துக்களில் 40 போரின் பின்னர் அவர்களிடம் மீளவும் கைளிக்கப்பட்டிருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
தவிர பொதுமக்களின் போக்குவரவுக்காக மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் வீதிகள் தொடர்பாகவும் அவர் பட்டியலிட்டார்.
குடாநாட்டினைப் பொறுத்தவரையில் மின்சாரம் தடையில்லாமல் தொடர்ந்தும் வழங்கப்பட்டுவருவதாகவும் சுண்டிக்குழி பெண்கள் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரப் பரீட்சையில் 99 சதவீதமானவர்கள் தேறியிருப்பதாகவும் அவர் கூறினார்.
மந்த கதியில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றல்
இரணுவத்தின் தரவுகளின் படி 640 குடும்பங்களைச் சேர்ந்த 2115 பேர் யாழ்ப்பாணத்திலுள்ள முகாம்களில் தொடர்ந்தும் வசித்துவருகிறார்கள். வடமராட்சி கிழக்குப் பகுதியில் மிகவும் மெதுவாகவே கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதுதான் இவர்களது மீள்குடியேற்றம் காலதாமதமாவதற்கான காரணம் என்றார் அவர்.
ஆனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பிரதேசங்கள் தற்போது உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளனவே என அவரிடம் கேட்கப்பட்டது?
"புள்ளிவிபரங்களின் படி தற்போது உயர் பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்ற பகுதிகளில் வசித்துவந்தவர்கள் குடாநாட்டினை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது மாவட்டத்தின் பிற பிரதேசங்களில் நிரந்தரமாக வாழுகிறார்கள்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற குடிசன மதீப்பிட்டின் படி 2000 ஆம் ஆண்டளவில் குடாநாட்டின் சனத்தொகை ஒரு மில்லியனைத் தொடும் என அனுமானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய புள்ளி விபரங்களின் படி குடாநாட்டின் தற்போதைய சனத்தொகை 727,000 பேர்.
குடாநாட்டினை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் தற்போது உயர் பாதுகாப்பு வலயம் அமைந்திருக்கும் பிராந்தியத்தினைச் சேர்ந்தவர்களே" என்றார் அவர்.
அண்மையில் கனடாவிலிருந்த வந்திருந்த ஒரு குடும்பத்தினர் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருக்கும் தங்களது வீட்டினைப் பார்வையிடுவதற்கு விரும்பினார்கள்.
"நீண்ட நாட்களின் பின்னர் ஏன் இப்போது வந்திருக்கிறீர்கள் என நான் அவர்களிடம் கேட்டேன்.
தான் வீட்டை விட்டு வெளியேறியபோது சில நகைகளை அங்கு புதைத்துவிட்டுச் சென்றதாக அந்தப் பெண் என்னிடம் தெரிவித்தாள்" என்கிறார் இந்த இராணுவ அதிகாரி.
"நாங்கள் அந்தக் குடும்பத்தினை அழைத்துச் சென்றோம்.
தனது காணி எது என அந்தப் பெண்ணால் அடையாளம் காட்ட முடியவில்லை.
ஏனெனில் அந்தப் பிராந்தியம் இப்போது அடர்ந்த காடாக மாறிவிட்டது" எனத் தொடர்ந்து தெரிவித்தார் அந்த அதிகாரி.
http://www.puthinappalakai.com/
Wednesday, July 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment