Thursday, July 8, 2010

கரும்புலிகள் மறக்க முடியாத புனிதர்கள்..

கரும்புலிகள் பலருக்கு சிம்ம சொர்ப்பனமாக இருந்தாலும் தமிழினத்தின் காவலாளர்களாகத் தான் இவர்களை தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். இவர்கள் ஒன்றும் மனவருத்தமானவர்களோ அல்லது வன்முறையின் மீது நாட்டம் கொண்டவர்களோ இல்லை. தமது இனம் அழிவை நோக்கிச் செல்கின்றது என்பதையறிந்து தலைவனின் வழியே தமிழ் மக்களுக்கு பாதுகாவலர்களாக கிளம்பியவர்கள் தான் கரும்புலிகள். இவர்கள் மரணிப்பவர்கள் இல்லை மாறாக மறுபிறப்பு எடுப்பவர்கள். இவர்களைப் போற்றும் நாள் தான் ஜூலை 5.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழம் இருந்த வேளையில் துணிச்சலுடன் தெருக்களில் அணிவகுப்பு வரும் மாணவ மாணவிகள் பட்டாளம் கடந்த வருடமும் இந்த வருடமும் தமது மறவர்களை நினைவு கூரமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்களின் மனங்களில் இன்றும் இருப்பவர்கள் கரும்புலிகள். சாவை குறித்துக்கொண்டு எந்த சலனமும் இல்லாமல் தமது இளம் வயதில் குண்டை கட்டிக்கொண்டு எதிரியை குறிவைத்து தாக்குதல் செய்து பல நூறு எதிரியை சாதுரியமாக தாக்கி கதிகலங்க வைப்பவர்கள் தான் கரும்புலிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5-ஆம் நாள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும். இத்தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களை நடத்தி எதிரிகளை கதிகலங்க வைத்தார்கள்.

எந்த சலனமும் இல்லாமல் எதிரியின் குகைக்குள்ளேயே நடமாடி, தமது கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் இமையளவும் தடம் புரளாமல் தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்த அற்புத மனிதர்கள் தான் இந்த கரும்புலிகள். இவர்களையும் இவர்களின் இறுதி வார்த்தைகளான ‘தமிழீழமே தமிழரின் தாகம்’ என்ற வேத வாக்கையும் உலகத்தமிழர்கள் மறப்பார்களானால் இவர்கள் வாழ்ந்து கொண்டும் பிணமானவர்களாகவே தான் கருத வேண்டியிருக்கும்.

பலவீனமான தமிழரின் பலமே கரும்புலிகள்

பலவீனமான தமிழ் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே தான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன் என விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்கள் தான் கரும்புலிகள். அன்று கட்டளை கொடுக்கப்பட்டிருந்தால் சிங்கள இராணுவத்திற்கு கொடுத்திருப்பார்கள் இந்த கரும்புலிகள் ஒரு தெளிவான பாடம்;. கட்டுநாயக்காவில் அமைந்திருந்த சிறிலங்கா அரசின் விமானப்படையினரின் தளத்தை அன்றொரு நாள் இரவைத் தாண்டிய வேளை, தமது தாகத்தை தீர்த்துக்கொண்டார்கள் தாக்குதலைத் தொடுத்து. அன்று சென்றார்கள் வென்றார்கள்.

உலகமே தலையில் கைவைத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். பல நாட்கள் வேவு பணிகளுக்கு பின்னர் தீபாவளிப் பண்டிகையை அனுராதபுர நகருக்கே காட்டி வெற்றிவாகை சூடினார்கள் கரும்புலிகள். பதினெட்டு வானுர்திகளை சாம்பலாக்கி தாம் யார் என்று உலகுக்கே நிருபித்தார்கள் இந்த கரும்புலிகள். இவர்களின் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனவேதான் இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம். கடந்த சில வருடங்களாக வட மற்றும் தென் தமிழீழ பகுதிகளில் இடம்பெற்ற தன்னிச்சையாக திணிக்கப்பட்ட போரில் கரும்புலிகளின் பங்கு என்பது மிக குறைவானதாகவே இருந்துள்ளது.

இவர்கள் மீதான கட்டுப்பாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பு படைக்கு மனத் தைரியத்தை கொடுத்து பல்லாயிரக்கணக்கான தமிழரை கொலை செய்ய உதவியது. அன்று கரும்புலிகள் கடந்த காலங்களைப் போல செயல்பட்டு இருந்திருந்தால் பல ஆயிரம் எதிரிகள் வன்னி மண்ணில் புதைக்கப்பட்டிருப்பார்கள். விடுதலைப்புலிகளின் தலைவரின் சாணக்கியத்தை இன்றும் எவரினாலும் அறிய முடியாது. அவரின் வழி தனி வழி இதை கண்டிப்பாக ஒரு நாள் காண்பார்கள் தமிழர்கள். இன்று தமிழீழ தேசமெங்கும் தனது கால்களை அகலப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் கொடிய கரங்களினால் தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் அனைத்தும் பல நூறு கரும்புலிகளை உருவாக்கும் என்பது தான் உண்மை.

அரசபடையினரின் அட்டூழியங்கள் அனைத்தும் தமிழீழ கொள்கைக்கு மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும். ஒரு குறிப்பிட்ட வாரத்தில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த அரசபடையினருக்கு விருந்து கொடுக்கும் காலம் ஒரு நாள் வரும் என்பது மட்டும் திண்ணம். தமிழ் மக்கள் இன்றேனும் இவர்களின் தற்கொடையை போற்றி உலகுக்கு சொல்லவேண்டும். அன்று நிர்க்கதியான நிலையில் இருந்த தமிழீழ மக்களை கொன்றும் சித்திரைவதை செய்த சிங்கள பேரினவாத அரசைப்பற்றி உலகம் அனைத்தும் தமிழர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கினார்கள். 2002 – ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுடன் சமாதான ஓம்பந்தத்தை செய்து, அத்துடன் தாம் கொடுத்த வாக்குறுதியை பேணி கடைசி வரை அந்த சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகாமல் ஒப்பந்த சரத்துகளின் படியே விடுதலைப்புலிகளும் கடைசி வரை பேணிவந்தார்கள்.

கரும்புலிகளை போற்றிக் கொண்டாடுவோம்

மரணித்த கரும்புலி மறவர்கள் ஒன்றும் மடிந்தவர்கள் அல்ல. இவர்களின் சாவை போற்றி கொண்டாட வேண்டிய தினம். இந்த தினத்தில் ஒவ்வொரு தமிழனும் சபதம் எடுக்க வேண்டும். அந்த மாவீரர்கள் விட்டுச்சென்ற பணியை வாழும் தமிழன் செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் களம் காணவேண்டும். இப்படியான கொள்கையுடன் செயாற்றினால் தான் மரணித்த வேங்கையின் ஆத்மா அமைதியாகும். அதுவரை மரணித்த வேங்கை தமிழீழ கொள்கையுடன் பகை எடுக்கும் என்பது தான் உண்மை. இன்று 90 வயதை தாண்டிய முதியவர் ஒருவரே தான் சாகக்கூடாது என்று கடவுளை வணங்குவதும் மற்றும் மருத்துவமனையை நாடி வைத்தியத்தை பெற்று இன்னும் பல வருடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் காலத்தில் இந்த கரும்புலிகளோ தமது இளம் வயதில் சாவை அரவணைக்கின்றார்கள்.

இவர்களை ஒவ்வொரு தமிழனும் போற்றி வழிபடவேண்டும். ஆனால் பல தமிழர் இவர்களை நினைவுபடுத்த நிகழ்வுகளை நடத்தப் பயப்படுகின்றார்கள் காரணம் இவர்களை உலக நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்து கைது செய்து போடுவார்களாம். உலக நாடுகள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் அதாவது கரும்புலிகள் ஒன்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் செய்வதில்லை. எதிரியின் பலத்தை அறிந்து அவர்களை அழிப்பதுவே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி. எப்படி ஜப்பான் நாடு தற்கொடை தாக்குதலை எதிரிக்கு எதிராக நடாத்தி எதிரியை கதிகலங்க வைத்தார்களோ அதைத்தான் கரும்புலிகளும் செய்கின்றார்கள்.

அன்று ஜப்பான் நாடு அதைச் செய்தது ஆனால் இன்று ஜப்பான் உலக நாடுகளின் நேச நாடாக விளங்குகின்றது. அதென்ன ஜப்பான் நாட்டுக்கு ஒரு சட்டம் ஈழத் தமிழருக்கு ஒரு சட்டம். பல உலக நாடுகள் கரும்புலிகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் தற்கொடை தாக்குதல்களை ஒப்பிடுகின்றார்கள். அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளிண்டன் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் கூறிய வார்த்தைகள் தமிழருக்கு சந்தோசத்தை கொடுத்தது. தெளிவாக ஹில்லரி அம்மையார் அவர்கள் கூறினார் உலகில் இயங்கும் அனைத்து போராளிகளையும் பயங்கரவாதிகளாக பார்க்கக் கூடாது என்று கூறினார்.

தமிழர்கள் மனம் தளராது தமது மரணித்த மாவீரர்களை அவர்களைக் கொண்டாடும் தினங்களில் போற்றி கொண்டாடி உலகுக்கு எடுத்துரைத்தால் உலகை தமிழர் வசம் ஈர்த்து தமிழீழ தனியரசை நிறுவ கரும்புலிகள் ஒப்புவித்த இறுதி தமிழீழ விருப்பை வெகு சீக்கிரத்திலையே நிறுவலாம் என்பது தான் அசைக்க முடியாத உண்மை. மரணித்த கரும்புலி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதுடன் அவர்களின் இறுதி அவாவை உண்மையாக்குவதே அவர்களுக்கு உலகத் தமிழினம் செலுத்தும் கடமை.

அனலை நிதிஸ் ச. குமாரன்
http://meenakam.com/?p=1989

No comments: