Thursday, July 22, 2010

பிரித்தானியாவில் இருந்து ஐ.நாவை நோக்கி நடை பயணம்



போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது.

மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், ஏ-3 நெடுஞ்சாலையூடாக நடந்து போட்ஸ்மவுத் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.

இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருக்கின்றது.

சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மாற்றுமொழி ஊடகங்களுக்கும் இது பற்றி அறிவிப்பதுடன், தமிழ் ஊடகங்களும் இந்த நடை பயணத்திற்கும், ஆங்காங்கே தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் தமிழ் இளையோம் அமைப்பு போன்றன கேட்டுள்ளன.

இதேபோன்று பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களும் இந்த நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சிவந்தனுடன் இணைந்து நடப்பதன் ஊடாக தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐரோப்பிய மக்கள் முன்னலையில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் இந்த நடை பயணத்தை ஏனைய நாடுகளில் ஒழுங்கு செய்துள்ள ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments: