Tuesday, July 20, 2010

இந்திய அரசு மீது கோவத்தின் உச்சத்தில் கொலைக்காரன் ராஜபக்சே..

இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே எனத் தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் திட்டித் தீர்த்திருக்கின்றார் ராஜபக்ஷே.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்கும் கொழும்பு அரசின் கொடூர ராணுவ நடவடிக்கைத் திட்டத்தின் உச்சக் கட்டம் கடந்த ஆண்டு முற்பகுதியில் உக்கிரமடைந்தபோது, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்டார்கள். மறைக்கப்பட்ட அந்தக் கொடூரங்களின் பின்னணியில் புதைந்து கிடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் அவை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குத்தரப்பு அப்போதே ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் முன் வைத்தபோது அந்த முயற்சியை வெளிப்படையாக எதிர்த்து அதற்குத் தடை போட்டது இந்தியாதான்.

அந்த இந்தியாவே அதே யுத்தக் கொடூர விஷயங்களுக்கான சர்வதேச விசாரணை அவசியம் என்று தற்போது மீண்டும் எழுந்திருக்கும் கோரிக்கைக்கு அதரவு தெரிவிக்கும் வகையில் செயற்படுகின்றது என இலங்கை அதிபர் ராஜபக்ஷே சீறிப் புழுங்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது.

ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் நரித் தந்திரப்போக்குக் குறித்து காலம் பிந்தியாவது புதுடெல்லி புரியத் தொடங்கியிருப்பதுதான் இந்த நிலை மாற்றத்துக்குப் பிரதான காரணம் என்கின்றனர் அவதானிகள்.

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப்- போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தனது எதிரி அமைப்பாகக் கருதிச் செயற்பட்டது புதுடெல்லி. அதன் காரணமாக பொது எதிரியான புலிகளை அழிப்பதற்கு கொழும்புடன் முழு அளவில் கைகோர்த்தது அது. ஆனால் புலிகளை ராணுவ ரீதியில் அழிக்கும் வரை இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுவதாகக் காட்டிக் கொண்ட ராஜபக்ஷே நிர்வாகம், யுத்தத்தில் இறுதி வெற்றி கண்டாயிற்று என்ற உறுதி வந்ததும் இந்திய விஷயத்தில் ‘ஆறு கடக்கும் வரை அண்ணன்- தம்பி, ஆறு கடந்ததும் நீ யாரோ நான் யாரோ.....’ என்ற கணக்கில் செயற்படத் தொடங்கி விட்டது.

புலிகளுக்கு எதிராகத் தான் தொடுத்த கொடூரப் போர் மூலம் ஈழத்தமிழர் தாயகத்தையே துவம்சம் செய்து நாசம் பண்ணிய ராஜபக்ஷே நிர்வாகம் அந்த யுத்த வெற்றி மூலம் சிங்களவர் மத்தியில் தனக்குக் கிடைத்த செல்வாக்கை அடுத்தடுத்து நடத்திய ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவைகளை நல்ல அரசியல் முதலாக்கி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது.

தன்னை அரசியல் ரீதியாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைத் தொடர்ந்து அதுவரை புலிகளை அடக்குவதற்குத் தன்னைப் பகிரங்கப்படுத்தாமல் ஒத்துழைத்து வந்த புதுடெல்லிக்கு எதிராகவும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியமைதான் புதுடெல்லி அதிகார வர்க்கத்துக்குப் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியாக வந்து அமைந்தது.

இந்தியாவின் தென்கோடி முனையில் இந்தனூண்டு சைஸில் இருந்து கொண்டு இலங்கை பண்ணத் தொடங்கியிருக்கும் அதிகப் பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் புதுடெல்லியின் புவியியல் கேந்திர ஸ்திர உறுதிப்பாட்டுக்குப் பேராபத்தாக மாறத் தொடங்கியிருக்கும் நெருக்கடியை புதுடெல்லி காலம் பிந்தித்தான் இப்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

‘பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்கு மீன்’ போல ஒரு புறம் புதுடெல்லியையும் தடவிக் கொள்வதாகக் காட்டிக் கொண்டு மறுபுறும் இந்தியாவிற்கு சவால் சக்தியாக விளங்கும் சீனாவை இலங்கையில் வலுவாகக் காலூன்றி, ஆதிக்கம் செலுத்தி, நிலைபெறுவதற்கும் இடமளிக்கும் ராஜபக்ஷே தந்திரத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற கட்டத்தை புதுடெல்லி இப்போது அடைந்துவிட்டது.

இந்த நெருக்கடி நிலையைத் தணித்து கொழும்பைத் தன் வழிக்குக் கொண்டு வரும் முயற்சியாக பல எத்தனங்களை புதுடெல்லி எடுத்துப் பார்த்தது. கடைசியாக அண்மையில் ராஜபக்ஷே புதுடெல்லி வந்தபோது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கே நாசூக்காகவும் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும் -இந்த விஷயத்தை அதிபர் ராஜபக்ஷேவிடம் நேரடியாக எடுத்துரைத்தார் எனக் கூறப்படுகின்றது. அப்போதும் கூட, வழமைபோல சிரித்துப் பேசி, உறுதி கூறி, வார்த்தை ஜாலம் காட்டிய அதிபர் மஹிந்த ராஜபக்ஷே, பின்னர் செயலில் தொடர்ந்தும் சீன உறவை வலுப்படுத்தி நிற்கும் சமிக்ஞைகளையே வெளிப்படுத்தி வருகிறார் என்று பொருமுகிறது புதுடெல்லி.

புதுடெல்லியைக் கிள்ளுக் கீரையாக்கி எகிறிக் குதிக்கும் ராஜபக்ஷேவை எப்படியும் அடக்கி வழிக்குக் கொண்டு வருவதற்காக சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கு முறைகளில் தேவையானது எதையும் கையாளப் புதுடெல்லி தீர்மானித்துவிட்டதாகத் தெரிகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பாக ஆராய்ந்து ஆலோசனையை சமர்ப்பிப்பதற்காக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீன் மூன் நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் நடவடிக்கை இந்திய ஆதரவுடன் கட்டவிழ்கிறது என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.

இந்த நிபுணர் குழுவை அமைக்கும் ஐ.நா. செயலரின் உத்தேசம், கடந்த பல மாதங்களாக செயல்படுத்தப்படாமல் பேச்சோடு கிடப்பில் போடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த எத்தனத்துக்கு இந்தியாவின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்ற சமிக்ஞை கிடைத்ததும் - ஏற்கெனவே அதற்கு மேற்குலகின் முழு ஆதரவும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டிருந்த - ஐ.நா. செயலாளர் நாயகம், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த பச்சைக்கொடிகாட்டிவிட்டார்.

மனித குலத்துக்கு எதிரான யுத்தக் குற்றச்செயல்களுக்காக சூடானிய அதிபருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் கட்டவிழ்ந்தனவோ அதே பாணியிலான செயற்போக்கே இலங்கை அதிபர் ராஜபக்ஷே விஷயத்திலும் சர்வதேச சமூகத்தினால் அச்சொட்டாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.

சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்காகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என சர்வதேச விசாரணை மன்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள சூடானிய அதிபர், அதன் காரணமாக தமது நாட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றமை போன்ற நிலைமை இலங்கை அதிபருக்கும் ஏற்படுமா? அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் சூடானிய அதிபருக்கு ஆதரவான தரப்பினர் போல காட்டி அவரைக் காப்பாற்ற முயன்ற சீனா, ரஷ்யா போன்ற தரப்புகள் சர்வதேச கருத்து நிலைப்பாடு சூடானிய அதிபரின் நிர்வாகத்துக்கு எதிராக வலுவாக முற்றித் திரண்டபோது, ஐ.நா. மன்ற நடவடிக்கைகளில் சூடானிய அதிபரைக் கைவிட்டு பின்வாங்கியமை போன்று இப்போதும் இலங்கை அதிபரை ஐ.நா. மன்ற நடவடிக்கைகளில் காப்பாற்றக் கூடியவை என்று கருதப்படும் சீனா, ரஷ்யா போன்ற தரப்புகள் கடைசி நேரத்தில் கைவிட்டுப் பின்வாங்குமா? இதற்கெல்லாம் உரிய பதில்களை அடுத்துவரும் மாதங்களில் நாம் காணமுடியும்.

ஆனாலும் இந்தியாவைத் துச்சமாக மதித்து, எள்ளி நகையாடும் விதத்தில் நடந்து கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷேவை தனது வழிக்குக் கொண்டு வருவதற்கு புதுடெல்லி தற்போது வகுத்திருக்கும் வியூகம் -அல்லது காய் நகர்த்தல் -மிக்க காலதாமதமானது என்பது மட்டும் நிச்சயம்.

இந்தியாவின் இப்போதைய போக்குக்காக சீறி எரிச்சல்படும் ராஜபக்ஷே, தப்பித் தவறி சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஒன்று அவருக்கு எதிராக நடத்தப்படுமானால் அந்தக் கொடூர யுத்த நடவடிக்கைகளை எல்லாம் இந்தியாவின் வழிகாட்டுதலிலேயே - புதுடெல்லியின் சொல்படியே முன்னெடுத்தேன் என இந்தியாவுக்கு எதிராக ‘ஸேம் சைட்’ கோல் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதுதான் தற்போதைய நிலையாகும்.

http://www.suriyakat...age.php?key1=T3

No comments: