Tuesday, August 3, 2010

02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள்







02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், ‘தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.

அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில் எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும் எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.

தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின் இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும் தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.

அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும், இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி. அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால் இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன. மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று அழிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் வீரச்சாவடைந்தனர்.
அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர்.

இந்தக் கரும்புலித் தாக்குதலில்
கரும்புலி கப்டன் திரு
கரும்புலி மேஜர் திலகன்
கரும்புலி லெப். ரங்கன்
கரும்புலி கப்டன் நவரட்ணம்
கரும்புலி மேஜர் ஜெயம்

ஆகிய கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்..

No comments: