Friday, August 20, 2010
சீன - இந்திய - அமெரிக்க வல்லரசுகள்: மோதிக்கொள்ளுமா?
01.
வெளிப்பார்வைக்கு தற்போதைய நிலையில் இந்திய - சீன அரச மட்டத்திலான உறவு நிலை திடமான தொன்றாகவே தோற்றமளிக்கிறது.
பல்வேறு அனைத்துலக வல்லரசு நாடுகளுடன் இவ்விரு வல்லரசுகளும் இணைந்து செய்து கொண்ட உடன்படிக்கைகளும் அவரவர் 'நம்பிக்கை', 'தோழமை' என்பவற்றை வலியுறுத்துவதாகவே இருக்கிறன.
உலகின் தலைநகரங்களில் இரு அரசுத் தலைவர்களும் சந்தித்த பொழுதெல்லாம் ஒரு பகுதி மறு பகுதியின் உணர்வுகளை சீண்டி புதிய முறுகல் நிலைகளை உருவாக்காது ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்வது போன்ற உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகி இருக்கிறன.
மேலும் இந்தியாவும் சீனாவும் பொருளாதார தொடர்புகளிலும் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றன.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளில் அமெரிக்காவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு இந்திய வர்த்தகம் சீனாவுடன் பெருகிவருவது குறிப்பிட தக்கதாகும்.
கடந்த ஆண்டு 40 பில்லியன் பெறுமதியான வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திகொண்ட இந்தியா இவ்வாண்டு அதனை 60 பில்லியனாக அதிகரிக்க உள்ளது.
இந்தியாவின் வடபகுதியின் பாதுகாப்பு மற்றும் எல்லை முரன்பாடுகளை களையுமுகமாக பதின்மூன்று தடவை பேசியும் இணக்கம் காணப்படாத போதிலும் பதின்நான்காவது தடவையும் பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
பயங்கரவாத எதிர்ப்பு, ஆயுத கட்டுப்பாடுகள், மக்கட்தொகையை அழிக்ககூடிய தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மீதான வரையறைகள், மனித உரிமைமீறல்கள் மீதான கட்டுப்பாடுகள் என அரச மட்டத்திலான ஏராளமான உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியும் உள்ளன.
தனது மொத்த தேசிய உற்பத்தியிலும், தனிமனித வருமானத்திலும், அமெரிக்காவை அளவு கோலாக நோக்கும் சீனா தனது பொருளாதார எல்லைகளை எட்டும் வரை எந்த ஒரு வல்லரசுடனும் முரண்படக்கூடாது என்று கொள்கை வகுத்து இருக்கிறது.
இதற்கும் மேலாக சில நாட்களுக்கு முன்பாக Oxford University ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இந்தியாவின வறுமை நிலை சில வடஆபிரிக்க நாடுகளிலும் பார்க்க அதிகரித்ததாக இருப்பதாகவும் 410 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருப்பதும் மிக முக்கியமானதாகும்.
ஏனெனில் மிக வேகமான வளர்ச்சியை தன்னகத்தே கொண்டதாக காட்டிகொள்ளும் இந்தியாவின் சீரற்ற பொருளாதாரப்பரம்பல் நிலையை, சமூக அடிப்படையிலான கணிப்பீடுகள் மிக கச்சிதமான வகையில் வெளிக்கொனர்ந்தமை இந்தியா ஒரு வகையில் இன்னும் முன்னேற வேண்டிய தேவையை எடுத்து காட்டுகிறது.
இந்த அறிக்கை ஒருசில ஆளும் அரசியற் கட்சி சார்ந்த செல்வந்தர்களுக்கு மட்டும் அதீத வியாபார சலுகைகள் மற்றும் முன்னுரிமை வழங்கும் இந்திய மத்திய அரசின் இரகசிய கொள்கைகளுக்கு சவாலாக அமைந்திருப்பது இங்கே முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த 410 மில்லியன் வறிய மக்கள் இந்தியாவின் வடக்கே உள்ள எட்டு மாநிலங்களில் வாழும் அதேவேளை இந்தியா சீனாவுடன் முரண்பாட்டை உருவாக்கி செலவீனங்களை அதிகரித்து கொள்ளும் நிலையில் இல்லை.
ஏனெனில் இதர மேலைநாடுகளின் வியாபார உடன்படிக்கைகள் மீதான நம்பிக்கை சிதைவடைவதற்கான ஏது நிலைகளை இத்தகைய முரண்பாடுகள் உருவாக்கி விடலாம்.
இவ்வாறு பல்வேறு காரணங்கள் இந்தியா சீனாவுடன் தனது முறுகல் நிலையை தவிர்த்து கொள்வதற்கான காரணங்கள் இருந்தும்,
• கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இருதரப்பினரும் ஒருவரில் ஒருவர் நம்பிக்கை வைத்து செயற்படாமை வலுவான ஓரு காரணியாக இருந்து வந்திருக்கின்றமை,
• மிக விரைவில் இந்தியாவை சீனா 'கொள்ளடக்கி' கொண்டு விட போகிறது என்ற இந்தியாவின் பயம், இது வரும் காலங்களில் பாகிஸ்தானியர்கள் எதிர் பார்ப்பது போல 'இந்திய துணைகண்டம்' என்று அழைப்பதற்கு பதிலாக 'சீனதுணைகண்டம்' என்று அழைக்க கூடிய நிலை ஏற்படலாம் என்ற இந்திய ஆய்வாளர்களின் சிந்தனை,
• தெற்காசிய நாடுகள் மத்தியிலே இரு நாடுகளும் யார் பலம் வாய்தவர் என்ற போட்டி நிலை, சீனா சார்க் மகாநாடுகளில் இதர அங்கத்துவ நாடுகள் ஊடாக தன்னையும் ஒரு சார்க் அங்கத்துவ நாடாக ஆக்கிகொள்வதில் மறைமுக அழுத்தங்களை பிரயோகிப்பதால் அது சார்க் நாடுகளிடையே தனது ஏக பல நிலையை பாதிக்கும் என்ற இந்தியாவின் பயம்.
• சமாதானத்தை மையமாக கொண்டு அதீத வர்த்தக உடன்படிக்கைகளால் இரு நாடுகள் ஒருவரில் ஒருவர் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படடாலும் பாரம்பரிய தேசிய அரசை பிரதிநித்துவபடுத்த கூடிய வகையில் இரு நாடுகளது பலம் சார்ந்த நிலையிலும் சமநிலை தென்படாவிட்டால் எந்த வர்த்தக நடவடிக்கைகளும் அதன் மையபொருளான சமாதானத்தை அடைவது கடினம் என்ற கோட்பாடும்.
• இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகத்திற்கும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகத்துக்கும் இடையில் பாரிய வர்த்தக இடைவெளி தென்படுகிறது. அத்துடன் சீனாவை நோக்கிய இந்திய வர்த்தகத்தில் மூலப்பொருட்களே பெரும் இடத்தை வகிப்பதும், இந்தியாவை நோக்கிய சீன வர்த்தக நடவடிக்கைகளில் தயாரிக்கப்பட்ட முடிவுப்பொருட்களே அமைந்திருப்பதும் சர்வதேச வர்த்தக அவதானிகளால் நோக்கபட்ட தொன்றாகும்.
[இங்கே இந்திய மூலப்பொருள் ஏற்றுமதியில் தனிப்பட்ட முதலாளிகள் பெரும்பாலான பயன்பெறுவோராகவும் சீன முடிவுப்பொருள் ஏற்றுமதியில் ஏராளம் தொழிலாளர்களின் வேதனமும் உள்ளடக்கி இருப்பதும் சமூக ஆய்வாளர்களால் சுட்டிகாட்டபட்டுள்ளது.] ஆக இந்திய வர்த்தக, சமூக பொருளாதர பலவீனம் சீன பொருளாதார, இராணுவ திட்டமிடலாளர்களின் மனோபலத்தை மேலும் அதிகரிப்பதாக கணிப்பிடப்படுகின்றமை,
• இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவும் இந்தியாவும் புவிசார் அரசியல் ஆதிக்க போட்டிக்குள் சிக்குண்டு போயுள்ளதால் எகிறிச்செல்லும் இராணுவச் செலவீனங்கள் தவிர்த்து கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளன. பாரிய செலவீனங்கள் கொண்டு இராணுவதளபாடங்களை உற்பத்தி செய்யவும், கொள்முதல் செய்யவும் இரு நாடுகளும் தயங்கவில்லை. இதனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தக்கவைத்து கொள்வதிலும், இரகசியமாக பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முனைந்து வருகின்றன. மேலும் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கடல் வழி போக்குவரத்தை தக்கவைப்பதிலே கூடிய கவனம் செலுத்துகின்றன.
• இந்தியாவின் நிரந்தர எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத வல்லமையை பெற்று தந்தது சீனாவே என்ற குற்றச்சாட்டும் இதனால் தெற்காசியாவிலே அணு ஆயுத போட்டி நிலையை சீனா உருவாக்கி விட்டது போன்ற விவகாரங்கள் என்றும் இவ்விரு நாடுகளையும் கொதிநிலைக்கு இட்டு செல்கின்றன.
எவ்வளவு தான் அரசதரப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டாலும் அருகிவரும் உலக மூலவளங்களும், பெருகிவரும் சனத்தொகையும் இயற்கையாகவே நாடுகளிடையே போட்டி நிலையை உருவாக்கி விடுகின்றன.
இதிலே அதீத சனத்தெகைப் பெருக்கத்துடன் வெகு வேகமாக பொருளாதார வலுநிலையை நோக்கி முன்னேறிவரும் சீனாவும் இந்தியாவும் பாரிய முரண்பாடுகளை எட்டுவது தவிர்க்க முடியாத தொன்றாகவே தெரிவதாக ஆய்வாளர்கள் நோக்குகின்றனர்.
02.
அனைத்துலக அரசியலில் 1917ம் ஆண்டு காலடி எடுத்து வைத்த அமெரிக்கா தனது படைவலிமை, பொருளாதாரவலிமை, இராஜதந்திர சூழ்ச்சித்திறன் இவை அனைத்தையும் முன்னிறுத்தி கடந்த சில பத்தாண்டுகளாக உலகின் ஏகோபித்த சலுகைகளை அனுபவித்து வருகிறது.
முதலாம் உலகப்போர் காலத்திலும்சரி, அதன்பின் உருவான League of Nations இலும் சரி, இரண்டாம் உலகப்போர் காலத்தின் பின் உருவான ஐக்கிய நாடுகள் சபையிலும் சரி அமெரிக்காவின் அனைத்துலக பலம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உபயோகிக்கப்பட்டு உலக ஓட்டத்தை அமெரிக்க நலன்களுக்கு ஏற்றவாறு திசைதிருப்புவதில் வெற்றியும் கண்டு வந்தது.
இதன் உச்சக்கட்டமாக தனக்கு சமனான பலம் கொண்டதாக கருதப்பட்ட சோவியத் ஒன்றியத்தினை தனது பல்வேறு சூழ்ச்சித்திறன்களால் பிளவுறச் செய்து தனக்கு ஆதரவான பல நாடுகளையும் உருவாக்கியமை குறிப்பிடதக்க தொன்றாகும்.
இதன் பின் கடந்த இருபது வருடங்களாக உலகின் தலைமையை தனி பெரும் வல்லரசாக அனுபவித்து வந்த அமெரிக்கா தற்போதய இந்திய - சீன திடீர் வளர்ச்சியால் சோவியத் பிளவுறுவதற்கு முந்திய நிலைக்கு செல்ல வேண்டியோ அல்லது 1917 இற்கு முந்தைய நிலையான எந்த அனைத்துலக அரசியலிலும் அதிகம் பங்குபற்றாது தனது சொந்த மூலப்பொருட்களையே நம்பி வாழ வேண்டிய கட்டத்துக்கு வரவோ விரும்புமா?
கடந்த ஆண்டுகளில் எந்த ஒரு அமெரிக்க பாதுகாப்பு வியூக அறிக்கையிலும் பின்வாங்குவதற்கான சிந்தனைக்கே இடமின்றி பதிலாக புதிதாக முன்னேறிவரும் வல்லரசுகளை தனது நலனுக்கேற்ப மாற்றுவது எவ்வாறு என்றே ஆராயப்படுகிறது.
அனைத்துலக அமைப்புகளான நேட்டோ அமைப்பு, ஐநா சபை, பாதுகாப்பு சபை, உலக வங்கி, நாணய நிதியம், இவற்றுடன் பல்வேறு கூட்டு வர்த்தக உடன்படிக்கைகளையும் தனது நலனுக்கேற்ப உலக ஒழுங்கை மாற்றுவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தனது நலனுடன் ஒத்திசைவாக செல்லாத நாடுகளுக்கெதிராக மனித உரிமை விவகாரம், காலநிலை மாற்ற விவகாரம், புதிய சர்வதேச சட்ட வரைமுறைகள் என்பனவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த ஆய்வுகளே அமெரிக்காவினால் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இதேவேளை ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் திறந்த வர்த்தகமும், சீனாவின் முன்னைநாள் அதிபர் டெங் சியாவோ பிங் வகுத்து கொடுத்த அடிப்படை நோக்கான பொருளாதாரமே பிரதான குறி, இதனூடாக கோடிக்கணக்கான சீன மக்களின் வறுமையை போக்குதல், எப்பொழுதும் அமெரிக்காவுடன் இசைவான நிலையையே கடைப்பிடிப்பது. போன்றன மூலோபாயமாகி போய்விட்ட இன்றய நிலையில் சீன - அமெரிக்க தரப்பினர் தற்போதைக்கு பகைத்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருந்த போதிலும்,
• சீனா தனதென உரிமை கொண்டாடும் தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரம்,
• சீன தனது பண வலுநிலையை அதிகரிக்க முற்பட்டபோது ஏற்பட்ட தகராறு,
• கொப்பனேகனில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் குறித்த மகாநாட்டில் சீனா ஒத்துழையாமல் செயற்பட்டது,
• இந்தியாவின் வட எல்லைகளிலே பதட்ட நிலைமைகளை உருவாக்குவது.
• தென் சீன கடற்பகுதியில் சீன கடற்படையினர் அயலில் உள்ள கடல் எல்லைக்குள் பதட்ட நிலையை உருவாக்குதல் என பல்வேறு விவகாரங்களில் சீன அமெரிக்க விரிசல்கள் இருந்துவருகின்றன.
• இவ்வாண்டின் ஆரம்பத்தில் அதிபர் ஒபாமா திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை சந்தித்தது சீனாவை எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
• இவை எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் International Institute for Strategic Studies இனால் நடாத்தப்படும் ஆசிய பசுபிக் பாதுகாப்பு மகாநாடு சிங்கப்பூரில் நடைபெற்ற வேளை மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்க சீன பாதுகாப்பு செயலர்கள் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டமை பெரிதாக பேசப்பட்ட ஒன்றாகும்.
• அத்துடன் அமெரிக்க பத்திரிகைகளும் சிந்தனையாளர்களும் சீனா குறித்து பெரும் அவநம்பிக்கை கட்டுரைகளையே எழுதி வருவதும் மிக முக்கியமானதாகும்.
ஆக சீன - அமெரிக்க உறவு நிலையிலே சற்று தளம்பல் நிலைகள் தென்பட்டாலும் இவற்றை தற்காலிகமாகவேனும் சீர்செய்து கொள்ளவே இருநாடுகளும் விரும்பிகொள்ளும் எனலாம்.
ஆனால் உலகின் தலைமைத்துவம் என்றநிலை வரும்போது சீனாவை தனது சொற்படி செயலாற்ற வைக்க அமெரிக்காவின் கையில் மனித உரிமை மீறல்கள் காலநிலை மாற்றம் குறித்த குற்றசாட்டு, ஏற்றுமதி வரி அதிகரிப்பு, என்பனவே ஆயுதங்களாக உள்ளன.
சீனாவை எதிர் கொள்வதற்கு அனைத்துலக இராஜ தந்திர பலநிலை இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.
இந்தியாவின் பலகால ஆசைகளில் ஒன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவ நாடாக ஆகிவிட வேண்டும் என்பதாகும்.
இதனை நிறைவேற்றுவதற்கு இந்திய தலைவர்கள் அமெரிக்காவின் தயவை நாடி நிற்கின்றனர். அதேவேளை அமெரிக்கா சீனர்களை எதிர்கொள்ள இந்தியாவின் தயவு மிக அவசியமானதாக கருதப்படுகிறது. இதனால் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவர் மீதொருவர் கூடுதல் நம்பிக்கை வைத்து செயலாற்ற ஆரம்பித்துள்ளனர்.
மறுவளமாக பார்ப்போமானால் ஒருவேளை ஒருவரில் ஓருவர் தங்கிவாழும் பொருளாதார வலை பின்னலினால் இந்திய - சீன உறவு நிலை மேம்படுமேயானால் அமெரிக்காவின் உலக தலைமைத்துவம் பெரும் கடினபாதைக்கு இட்டு செல்லபடலாம் என்பதனால் சீனாவை அதீதமாக சீண்டாத வகையிலாவது இந்தியாவுடன் பல்வேறு தெடர்புகளை பேணிக்கொள்வது.
உதாரணமாக உயர் கல்வி வசதிகள், அபிவிருத்தி திட்டமிடல்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், சுகாதாரம் வர்த்தகம்,கலாச்சார விழுமியங்களை பேனுவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவதனூடாக இரு நாடுகளின் உறவுகளையும் நெருக்கமாக வைத்திருக்க வழிவகை செய்வது இராஜ தந்திர யுக்திகளை தேவையான பொழுது இலகுவாக கையாள வகைசெய்யும்.
சமூக தேவைகளுக்காக அமெரிக்க கண்காணிப்பில் அணுசக்தியை பயன்படுத்துவது தெடர்பாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் வரும் நவம்பர் மாதம் அதிபர் ஒபாமா இந்திய சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இதுகூட இந்திய அமெரிக்க கூட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
முரண்பாடுகள் என்ற நிலையில் இந்திய அமெரிக்க கொதி நிலையிலும் பார்க்க சீன அமெரிக்க கொதி நிலை மிக அதிகமாக காணப்படுவதே இன்றைய தெற்காசிய பனிப்போர் காலநிலையின் முக்கிய அம்சமாகும்.
தனது பொருளாதார சேதங்களை தவிர்த்து கொண்டு உலகின் தலைமையை பேண துடிக்கும் அமெரிக்காவும். அதே வகையில் பிராந்திய ரீதியில் தமது மேலாதிக்க நிலையை வலியுறுத்த முனையும் சீன இந்திய அரசுகளின் காய்நகர்த்தல்களுமே இப்பொழுது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறன.
புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment