நமக்கென மலரப் போகும் ஒரு தேசத்தின் மலர்ச்சியை, தான் அடைந்து விட்ட சுதந்திரத்தை, இத்தனை வருடம் காத்திருந்த ஓர் விடுதலையை காண 'விடப் போகும் உயிரை கூட இழுத்துப் பிடித்துக் கொண்டு அடிமைகளுக்கு நிகராய் உயிர்ப்பயம் அறுத்துக்கொண்டு வாழும் சொற்ப மக்களுக்காகவாவது ஒன்று கூடுவோம். வாருங்கள் உயர் உலக தமிழினமே!
ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது.
அழகான அவ்வனத்தின் மேனி பசுமை கண்டு மெய்மறந்து அங்கேயே தங்கிவிடும் எண்ணம் கொண்டு ஒரு வியத்தகு இருப்பிடம் நிறுவி, காடெங்கும் கர்ஜித்து, நான் தான் ராஜா வந்திருக்கிறேன் நீங்களெல்லாம் எனக்குக் கீழென நாவினால் பறை முழங்கி திரிகிறது.
அந்த நான்கைந்து ஆடுகள் அதன் கர்ஜனையை தங்களின் ஒற்றுமையால் உடைத்தெறிந்து தன் சுதந்திரம் பாதித்திடாத பலத்தில் சுற்றித் திரிகின்றன. அப்படி ஒரு தினத்தில் அந்த 'தின்று கொழுத்த சிங்கம் காடு வளைக்க துணிந்து, பசிக்கென மேய்ந்த ஆடுகளை கொல்லத் திட்டம்தீட்டி நாலு கால் பாய்ச்சலில் அந்த ஆடுகளை நெருங்க, நெருங்கிய சிங்கத்தை ஆளுக்கொரு காலாக பிடித்து வனத்தின் எட்டாத்தூரத்தில் எட்டி வீசியது அந்த நான்கைந்து ஆடுகள்.
தோல்வியும், பொறாமையும், கோபமும், மண் ஆளும் வெறியுமாய் 'நாக்கில் மனித உயிர் குடிக்கும் இரத்தமென சொட்ட, மீண்டும் அந்த ஆடுகளின் பின் அலைந்தது அந்த சிங்கம். சிங்கத்திடம் அண்டி ஒதுங்கி அது போட்ட எச்சில் உணவை தின்று வாழவும் சில தந்திர நரிகள் ஆடுகளின் தோட்டத்திலிருந்து பிரிந்து சிங்கத்திடம் செல்லாமலில்லை.
நரிகள் சேனையானதில் சிங்கம் தன்னை ராஜாவானதாய் எண்ணி, நரிகளின் தந்திர யோசனையில் ஒவ்வொரு ஆட்டினையாக வளைத்து சண்டைக்கிழுத்து, ஒரு கட்டத்தில் காடு கனக்க கர்ஜித்து 'தான் மீண்டும் சண்டைக்குத் தாயாரென அறிவிப்பு விட்டது அந்த கோழைச் சிங்கம்.
மேலும், வீரத்தோடு நெருங்க இயலா ஒற்றுமை மிகுந்த அந்த ஆடுகளின் கண்களில் மண் தூவி தூவி மிக தந்திரமாக ஒவ்வொரு ஆடுகளையும் தனித் தனியாய் பிரித்து, தனித்து நிற்கையில் தடார் தடாரென கொன்று வீழ்த்தியது.
நாளடைவில், ஒற்றுமை குலைந்து திரிந்த ஆடுகளின் மொத்தக் கூட்டத்தையும் அழித்து அழித்து ஆடுகளின் அடையாளத்தையே அழிக்க அந்த கோழை சிங்கம் தயாரானது. கடைசி ஆடு மிச்சமிருக்கும் தறுவாயிலும், வனத்தின் நடுப்பகுதியில் ஏறி நின்று வெற்றி வெற்றி என்று கூச்சலிட்டு தீவிரவாதத்தை ஒழித்து விட்டோமென்றும், நாங்கள் எல்லாம் வீர சூரர்களென்றும், ஆடுகளை கொன்றது அரச தர்மமென்றும் ஊளையிட்டுக் கொண்டது நேரே நின்று நெஞ்சில் அடிக்க துப்பில்லா சிங்கம்.
இங்கு, சிங்கம் யாராக வேண்டுமாயினும் இருந்துவிட்டு போகட்டும். ஆடுகளை நாமென்று எண்ணிக் கொள்ளுங்கள். புலி விரட்டிய தமிழச்சியின் பால்குடித்த வழித் தோன்றல், சென்ற இடமெல்லாம் வென்ற கூட்டம், கையேந்தி வந்தவர்க்கு வாழை விரித்து படையலிட்ட தானப் பரம்பரை. தனக்கு கீழுள்ளோரை வளர்த்தும் மேலுள்ளோரை மதித்தும் 'பண்பு குலையாமல் வாழ்ந்த ஒரு பெருமை மிக்க இனம், இன்று எங்கு நிற்கிறது கண்டீரா உலகத்தீரே?
தமிழனின் புகழை ஒவ்வொன்றாய் சொன்னால் கட்டுரை போதாது, தமிழன் என்பவன் பிறரை வாழவைப்பவன் என்ற ஒற்றை அர்த்தத்திலிருந்து இன்றும் தாழாத ஒருவனாய் கேட்கிறேன்; உலகின் உடம்பெங்கும் பரவிய வேராய் இருந்தும் ஏன் அழிகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே வதை படுகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே கொன்று குவிக்கப் படுகின்றனர் நம் மக்கள்? என்னாயிற்று நம் புகழெல்லாம்? எங்கே போனது நம் வீரம்? என்ன ஆனேன் நான்.. நீ .. மொத்த தமிழரும் என்று யோசித்தீரா உலக தமிழினமே????
ஒரு தமிழின குழந்தை வளரும் போதே, உடுத்திய கால் சட்டை உருவி பாலினம் பார்த்து ஆணென்றால் குண்டு வைத்தும் பெண்ணென்றால் கைவைத்தும் செல்கிறார்களாம்.
பத்து பேரில் ஒரு பெண் அழகென்றால் பிடித்து, கேட்க யாரேனும் வந்தால் அவர்களையும் பிடித்து, அழகு நுகர்ந்து, பெண்மை குலைத்து, உயிர்கொன்று, உறுப்பறுத்து, பார் தீவிரவாதிகளை பிடித்துவிட்டோம் என்று செய்தி போடுகிறார்களாம்.
பசுமை குலையாமல் விளைந்த நிலத்திலிருந்து வந்த இனத்தின் பார்த்து பார்த்து கட்டிய வீடுவரை பிடுங்கிக் கொண்டு, காட்டில் இடம் தந்து 'போ வேண்டுமெனில் வாழ்ந்து கொள் உயிரையாவது காத்துக்கொள் என்கிறார்களாம். யாருக்கு யார்வந்து உயிர் பிச்சை போடுவது யோசித்தீரா உலகத்தீரே.
இன்று செம்மொழி ஆனது தமிழரை சற்று திரும்பி பார்க்கிறது உலகம். நாளை மறைக்கப்பட்ட நம் அத்தனை புகழும் வெளிவந்து நம்மை போற்றி நிற்கையில் இழந்த உயிர்களுக்கெல்லாம் இழப்பிற்கான ஈடிணை நம்மால் திருப்பித் தந்திட இயலுமா?
கத்தி எடுத்து ஒருவன் வெட்டுகையில், துப்பாக்கி கொண்டு சுடுகையில், பீரங்கி கொண்டு அடிக்கையில் குடும்பத்தோடு தன்னை தன் இனத்தின் விடுதலைக்காய் மாய்த்துக் கொண்ட மக்கள்; நாளை குதூகலிக்கும் பொழுதுகளுக்காய் முழுதுமாக இல்லாமல் போகும் முன் இருப்பவர்களை காத்துக்கொள்ளவேணும் சிந்திப்பது நம் கடமையில்லையா? மனிதமில்லையா உலகத்தீரே?
எத்தனை உயிர், எவ்வளவு இரத்தம் விட்டு காத்த மண்ணில், குடில் புகும் பாம்பு போல புகுந்து, கொடிநாட்டி செல்கிறானாம் எவனோ ஒரு வந்தேறி குடியானவன். நீதிபதியிலிருந்து நம் கால்சட்டை வரை, கொஞ்சமேனும் ஒட்டியிருக்கும் தமிழரென்னும் வாசனையை கூட அகற்றி விட போகிறானாம் 'எங்கிருந்தோ வந்து நம்மை இடைச்சாதி நாமென்றவன்.
இப்படி, தமிழர் வாழ்ந்த அத்தனை அடையாளமும் மறைக்கப்படுகிறது. ஒழிக்கப் படுகிறது. இனி எத்தனை பிரபாகரன்களை வைத்து மீட்டெடுக்கப் போகிறோம் தொலைந்து போகுமந்த ஈழ மண்ணினை, யோசித்தீரா?
இறந்த ஒரு வீரனை கூட 'விடுதலை கனவோடு உறங்கும் வீரமறவர் கூட்டமெங்கள் கூட்டம், எமக்கு மரணமென்பதே இல்லை, எம் வீரர்கள் விடுதலை கனவோடு உறங்குகிறார்கள், சுதந்திர விதைகளை தன் உயிரினால் பயிரிட்டு விட்டு ஓய்வு கொண்டுள்ளார்கள், மீண்டும் சொட்டிய இரத்தமெல்லாம் தமிழராகவே முளைத்து வருவார்கள், அன்று பிறக்கும் ஒரு தனி நாடு. அது கொடுக்கும் ஈழத்தின் முழு விடுதலையையும் என்று சொல்லி, கனவுகளோடு கட்டி வைத்திருந்த துயிலம் கூட (மாவீரர்களின் சமாதிகள் வைத்திருந்த இடம்) இன்று தகர்த்து நொறுக்கி அகற்றப் பட்டிருக்கிறதே ஈழத்தில். 'நெஞ்சு பதைக்கவில்லையா?
நான்கு குழந்தைகள் இருக்கிறதா இரண்டை பிடி, இரண்டு இருக்கிறதா ஒன்றை பிடி, ஒன்றே இருந்தாலும் அது எம் விடுதலைக்காய் இருக்கட்டும் இந்தா பிடியென பெற்ற குழந்தைகளை எல்லாம் அனுப்பி அனாதையாய் வாழும் 'அந்த தமிழச்சி வயிற்றிலெல்லாம் நெருப்பெரிகிறதே அதை எது கொண்டு அணைப்பீர் உலக தமிழினமே?
கணவன் இறந்தால் முண்டச்சி, கணவன் வென்றால் மண்ணின் விடுதலை என்று வாழ்ந்த பெண்களுக்கெல்லாம் இனி நம்மால் என்ன நீதி கிடைத்துவிடும் உலக தமிழினமே?
சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் வீட்டில் கொத்தாக குண்டு போட்டு கொத்தாக சிதைந்து போன உடலின் தசைகளை கூட்டி எரித்துவிட்டு ஈழத்துத் தெருவிலெல்லாம் பயித்தியமென அலைந்துக் கொண்டிருக்கும் எத்தனையோ வயோதிப தமிழனுக்கு 'உலக தமிழராய் நாமென்ன பதில் வைத்திருக்கிறோம் உறவுகளே?
கடைசியில், அவன் போனானா நீ போ, அவனும் போயிட்டானா நீ போ, அவளும் போயிட்டாளா இதோ நான் வரேனென்று தன் உயிர்களை துச்சமென வைத்து, அறுபது வருடங்களாக, வீட்டுப் பெண்களெல்லாம் போராடிய ஒரு இனத்தின் சுதந்திரம் உலகத்தின் கண்களில் தோல்வியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதே என்ன செய்து விட்டோம் உறவுகளே?
தழைத்து வாழ்கிறானே அவனை அழித்து விட்டு அவன் நாடுகளை பிடித்து விடுவோம் என்றா போராடத் துணிந்தான் தமிழன், மாறாக அடிமைத் தனம் ஒழித்து, இரண்டாம் பட்ச பேதம் உடைத்து, தன் சகோதரிகளின் மார்பில் தொட்டவனை கை முறித்து ஒதுங்கி போ எங்களை தமிழராய் ஒதுக்கியேனும் வாழவிடு என்று கேட்டது தவறா?
தவறில்லை. ஆனால் நம் தோட்டத்திலிருந்து பிரிந்து சென்ற அந்த நரி போல, நம்மில் இருந்து பிரிந்து சென்றதும், பிரிந்தும் அந்த கோழையோடு சென்று வாலாட்டியதும், நம்மை பற்றி நாமே சொல்லிக்கொடுத்து எதிரியை நம் இனத்தின் அழிப்பு மீது கொடி நாட்ட வைத்ததும், பத்து தலை கொண்ட நம் சக்தியை உடைத்து உடைத்து துளி துளியாய் பிரித்துக் கொண்டதும், நம் தவறுகளை நமக்குள்ளேயே நின்று அகற்றிக் கொள்ளாமல் தூர நின்று பரிகசித்துக் கொண்டதும், நிமிர்ந்து பார்த்து யார் மேலோ காறி உமிழ்வதாய் எண்ணி தன் மேலேயே தானே உமிழ்ந்து கொண்டதும் தவறு. தவறு. தவறில்லையா உலகத் தமிழினமே?
அந்த தவறுகளில் தான் சிதைந்து சுக்குநூறாகி பிரிந்து உடைந்து தொலைந்தே போகிறோம். இன்னும் கூட வென்றுவிட வாய்ப்புகள் நிறைய வைத்திருக்கிறோம். எஞ்சிய ஒரு இனத்தின் மிஞ்சிய உயிர்களையாவது காப்பாற்ற 'வேறொன்றும் வேண்டாம் நம் உலக தமிழர்களின் ஒட்டுமொத்த 'ஒற்றுமை' ஒன்று போதும், உலகை ஒரு சுண்டு விரல் சுட்டிக் காட்டும் வேகத்தில் தமிழரென்னும் இனம் தன்னை வெகு சுலபமாக கம்பீரப் படுத்திக் கொள்ளும்.
இன்றென்றில்லை, என்றுமே நாம் வீரத்திற்காக போர் செய்திருக்கிறோம், வென்றோமென நிருபித்துவிட்டு மண்ணாசை கூட இல்லாமல் எத்தனையோ இடங்களை மண்ணினை நாட்டினை ஒரு கொடிநாட்டியதோடு விட்டுவந்திருக்கிறோம். மண்ணிற்கு மனிதனை தாண்டி 'ஆசை கொள்ளாதவன் தமிழன், என்பதற்கான வரலாற்றுக் நிகழ்வுகள் நிறையவே உள்ளன.
இனியும், நாம் பிறரின் மண்ணோ, பிறரை துன்புறுத்தும் எண்ணமோ கொள்ளப் போவதில்லை. யாரையும் அடிமையாக்கி அவன் தலைமேல் ஏறி நின்று ஆட்சி முழங்கவோ நமக்கு ஆசை இல்லை. ஆனால் தன் அடிப்படை உரிமைக்கு போராடிய தன்னின மக்களுக்காய் ஒரு சின்ன குரல் கொடுப்போமே;
சுற்றி நிற்கும் பத்து நூறு ஆயிரம் கோடான கோடி பேரும் சேர்ந்து ஒரு ஒற்றை குரலை நம் மக்களுக்காய் கொடுப்போமே தன்னை இணைத்துக் கொண்ட ஒரு குடையின் கீழ் 'நம்மை அழிக்கத் துணிபவரின் பயத்தை சற்று உலகிற்கு நடுங்க நடுங்க காட்டுவோமே.
காலம் காலமாய் வளர்த்த நம் வீரம் பண்பு பாரம்பரியமென நம் அத்தனை கொடையின் துண்டிப்பும் ஒரு கற்றை நூலிழையில் அறுபடும் இந்நிலையிலாவது, 'நம் மீதமுள்ள அடையாளங்களையாவது, தன் மொழிக்கென உருவாக்கப் போராடிய மக்களின் மிச்சமுள்ள தேசத்தையாவது, இத்தனை வருடங்களாய் உயிர்விட்டு சிந்திய ரத்தக் கரையினை வரலாற்றிலிருந்து பிறர் அகற்றிவிடும் முன் 'எட்டிப் அதை பிடித்துக் கொள்வோமே? அந்த நான்கு ஆடுகளின் ஒற்றுமையை மீண்டும் கொண்டு 'தமிழ் என்னும் ஒரு குடையின் கீழ் தமிழர் என்னும் ஒற்றை பலமாய் மீண்டும் சேர்ந்து நிர்ப்போமே உறவுகளே???
இறந்த இறக்க இருக்கும் அத்தனை லட்ச உயிர்களின் கதறல்களுக்கும் செவி சாய்ப்பீர்களா? என்று கேட்கமட்டும் இதை எழுதவில்லை. செவி சாயுங்கள், சிந்தியுங்கள், எதையேனும் செய்ய துடித்தெழுங்கள் என்று கேட்கிறேன்.
தமிழுலகின் மைந்தர்களாகிய நாம், நம் பிடியில் இருக்கும் ஒரு துளி தயக்கத்தை துச்சமென உடைத்தெரிந்துவிட்டு அடுத்த அடியை எடுத்து வைக்கையில் நமக்கான நீதியை இவ் உலகம் கொடுக்காமலா போகும்?!!!
இன்னமும் கூட, ஊசலாடும் உயிரை இழுத்துப் பிடித்து, வெறிக்க வெறிக்க தன்னிரு விழிகளை திறந்து, நமக்கென மலரப் போகும் ஒரு தேசத்தின் மலர்ச்சியை, தான் அடைந்து விட்ட சுதந்திரத்தை, இத்தனை வருடம் காத்திருந்த ஓர் விடுதலையை காண 'விடப் போகும் உயிரை கூட இழுத்துப் பிடித்துக் கொண்டு அடிமைகளுக்கு நிகராய் உயிர்பயம் அறுத்துக்கொண்டு வாழும் சொற்ப மக்களுக்காகவாவது ஒன்று கூடுவோம்; வாருங்கள் உயர் உலக தமிழினமே!!
- வித்யாசாகர்
Wednesday, August 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment