Tuesday, August 3, 2010

விபச்சாரியும் வியாபா‌ரிகளும்……?

நடிகை அசின் இலங்கை சென்றது ஈழ அரசியலை எதிர்பாராத திசைகளுக்கு இழுத்து சென்றுள்ளது.

அசின் படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார் என்றதும் தமிழ் அமைப்புகளும், திரைத்துறையைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெ‌ரிவித்தனர். பாசிஸ ராஜபக்ச அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை குறித்து சர்வதேச சமூகம் கறாரான முடிவுகள் எடுத்திருக்கும் இந்தச் சூழலில், இந்திய திரை நட்சத்திரங்கள் இலங்கை செல்வதும், இலங்கை அரசை புகழ்ந்து பேட்டியளிப்பதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தவும், நீர்த்துப் போகச் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் அசினின் இலங்கை பயணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெ‌ரிவித்தனர்.

இந்தக் குரலுக்குப் பின்னால் இருந்த அரசியல் தேவையை அசின் கண்டுகொள்ளவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனை குறித்தோ, அவர்களின் போராட்டம் குறித்தோ எந்த‌ப் பு‌ரிதலும் இல்லாத அசின் இந்த அரசியல் தேவையை கண்டு கொள்ளவில்லை என்பதைவிட அவரால் கண்டுகொள்ள முடியாது என்பதே பொருத்தமாக இருக்கும். லண்டன் ட்‌‌ரீம்ஸ் தோல்விக்குப் பிறகு இந்திப் படவுலகால் புறந்தள்ளப்பட்ட அவருக்கு ரெடி படம் பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தவனுக்கு கிடைத்த பற்றுக்கொடி. இலங்கை என்றில்லை, இழவு வீட்டின் நடுவில் டூயட் பாட வேண்டும் என்று சொல்லியிருந்தாலும் இதே ஆர்வத்துடன் செய்திருப்பார்.

ஒரு நடிகை என்ற அளவில் அசினின் இலங்கைப் பணயம் ஈழத் தமிழர்பால் நேர்மையான அக்கறை கொண்ட ஒருவரும் பொருட்படுத்தக் கூடியதல்ல. அதேநேரம் அசினை பகடைக்காயாக வைத்து அரங்கேற்றப்பட்ட அரசியலும், அந்த அரசியல் இன்று தமிழகத்தில் உருவாக்கியிருக்கும் கருணையின் மாயத் தோற்றங்களும் முக்கியமானவை. ஈழத் தமிழ‌ரின் நலனுக்கு எதிரானதும், இனப்படுகொலை அரசியலுக்கு வலுவூட்டுவதுமான இந்த மாயத் தோற்றங்களை கலைப்பதும், இந்த தோற்றங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள சதியின், சந்தர்ப்பவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதும் ஈழ அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியமானது.
இந்த இடத்தில் சல்மான் கான் குறித்தும் அவரது ரெடி திரைப்படம் குறித்தும் குறிப்பிடுவது அவசியம்.

ஐஃபா திரைப்பட ‌விருது விழா தூதர் பொறுப்பிலிருந்து அமிதாப்பச்சன் விலகியதுடன் அவரது குடும்பமே - அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் - விழாவை புறக்கணித்தது. இதையடுத்து தூதர் பொறுப்பை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். இதனை எதேச்சையாக நடந்த ஒன்றாக கருத இயலாது. இவர்கள் இருவருமே ஐஸ்வர்யாராயால் காதலிக்கப்பட்டு கை கழுவப்பட்டவர்கள். அமிதாப்பச்சன் குடும்பம் புறக்கணிக்கும் ஒன்றை அங்கீக‌ரிப்பற்கும், கொண்டாடுவதற்குமான நியாயமும், மனோநிலையும் இவர்கள் இருவருக்குமே உள்ளது. ஐஃபா விழாவை வெற்றிபெற வைக்க இவர்கள் காட்டிய அதிகபடியான முனைப்புக்கு இந்த மனோநிலை ஒரு சிறப்புக் காரணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளினால் எழுந்த இந்த உத்வேகத்தால் விழாவை வெற்றி பெறவைக்க முடியவில்லை. விழா பெருத்த தோல்வியடைகிறது. இதன் பிறகே மொ‌‌ரீஷியஸ் தீவில் நடக்கவிருந்த ரெடி படத்தின் படப்பிடிப்பை வம்படியாக இலங்கைக்கு மாற்றுகிறார் சல்மான்கான். என்னை தோற்கடித்தவர்களை நான் தோற்கடிக்க வேண்டும் என்ற சல்மான்கானின் ஈகோ மொ‌‌ரீஷியஸ் படப்பிடிப்பை இலங்கைக்கு இழுத்து வருகிறது.

சல்மான்கானின் ஈகோவும், அசினின் பிழைப்புவாதமுமே அவர்களை இலங்கைக்கு வரச்செய்ததே அன்றி ஈழத் தமிழர்பால் உள்ள கனிவோ, மனித நேயமோ அல்ல.

படப்பிடிப்புக்காக அசின் இலங்கை சென்றது உறுதியானதும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் திரையுலகில் கேட்கத் தொடங்கின. பிரச்சனை பெ‌ரிதாவது அறிந்ததும் அசின் விளக்கமளித்தார். திரைப்பட கூட்டமைப்பு தடை போடுவதற்கு முன்பே ரெடி படத்தில் நான் கமிட்டாகிவிட்டேன். படப்பிடிப்பை எங்கு நடத்துவது என்று முடிவு செய்வது தயா‌ரிப்பாளரும், இயக்குனரும்தான். வெறும் நடிகையான என்னால் என்ன செய்ய முடியும்?

No comments: