Wednesday, August 18, 2010

தமிழ்' வாழ வழி ஏற்படுமா?



அரசாங்கம் என்பது என்ன? "மக்கள் நலனைக் கட்டிக் காக்கும் ஒரு மாபெரும் அரசியல் அமைப்பு' என்றே அரசியல் சாசன விற்பன்னர்கள் கருத்துக் கூறுகின்றனர். ஆனால், இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய - மாநில அரசுகள் அப்படி இருக்கின்றனவா?
""மதுக்கடைகளின் வருமானத்தைவிட பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான் முக்கியம்; அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க முடியாது...'' என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளது. இருந்தாலும் என்ன, அதற்காக நமது அரசு எந்திரம் அசைந்து கொடுத்து விடுமா?
மதுக்கடைகள் அரசின் வணிக நிலையங்களாகவும், கல்விக்கூடங்கள் தனியாரின் வணிக நிறுவனங்களாகவும் மாறி விட்டதைவிடப் பெரிய சமுதாயச் சீர்கேடு இருந்தால் சொல்லுங்கள்.
சமத்துவ சமுதாயத்துக்கான தொடக்கமாக சமச்சீர் கல்வியை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியிருப்பதை நாம் வரவேற்கிறோம். தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி 6,400 பள்ளிகள் நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளன.
இதுபற்றி அரசின் முடிவு தற்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்புக் கல்வியாண்டில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கல்விக் கட்டணமே பொருந்தும். மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகள், நீதிபதி குழு இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றியெல்லாம் தனியார் மற்றும் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் கவலைப்படவில்லை; பழையபடியே கட்டண வசூலை நடத்தி முடித்துவிட்டன.
தனியார் பள்ளிகளில் நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பெற்றோர், நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் புகார் அளித்துள்ளனர். அத்துடன் அந்தப் புகார்கள் தொடர்பாகத் தொடர்புடைய பள்ளிகளுக்கு விசாரணைக்குச் செல்லும் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
அதிகக் கட்டண வசூல் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 113 புகார்களில் 21 புகார்கள் உண்மை என்று நிரூபணம் செய்யப்பட்டன. பள்ளிகளில் ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது உயர் அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதுபற்றியெல்லாம் தனியார் கல்வி நிறுவனங்கள் கவலைப்படாததற்குக் காரணம், அவர்களுக்குத் தமிழக அரசு கல்வித்துறையில் இருக்கும் செல்வாக்குத்தான்.
சமச்சீர் கல்வி தொடர்பாக, பேராசிரியர் முத்துக்குமரன் குழு பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது தெரிந்ததே. குழுவின் முக்கியப் பரிந்துரையாகிய தமிழ் வழிக் கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கோவைத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வரின் முக்கிய அறிவிப்பாகிய தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பது வரவேற்கத்தக்கதாகும். எனினும், தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணித்துவிட்டு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்பது சரியான நடைமுறைதானா என்ற கேள்வி எழுகிறது.
இது போதாது என்று இப்போது மற்றோர் அறிவிப்பும் தாய்மொழிக் கல்விக்கு எதிராக அமைந்துள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்தங்கிய பகுதிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான "மாதிரி பள்ளி'களைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நடப்புக் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய 18 ஒன்றியங்களில் ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி வீதம் 18 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. காமராஜின் 107-ம் பிறந்தநாளான 15-7-10 அன்று தமிழக முதல்வர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிப் பள்ளிகள் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு எதிரானது; சமச்சீர் கல்விக்காக அமைக்கப்பட்ட பேராசிரியர் முத்துக்குமரன் அறிக்கையில் பள்ளிக்கல்வி அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
1956-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்துக்கும் எதிரானதாகும். அத்துடன் தமிழக அரசின் இச்செயல்பாடு மக்களிடம் பரவி வரும் ஆங்கில மோகத்துக்கும், ஆங்கில மோகத்தையே மூலதனமாகக் கொண்டு நடைபெற்றுவரும் தனியார் கல்வி வணிகத்துக்கும் துணை போவதாகும். மக்கள் நலம் நாடும் ஓர் அரசு பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் எப்படி இருக்க முடியும்?
தமிழ் அமைப்புகளின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி அனைத்தும் தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்பதைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டு முதல் பொறியியலில் கட்டடவியல், இயந்திரவியல் என இரு பிரிவுகளில் தமிழ் வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொறியியல் தமிழ்வழிப்படிப்பு மாணவர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளில் தமிழ்வழிப் படிப்பில் 1,380 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் கலந்தாய்வின் மூலம் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அதே தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வியில் ஆங்கில வழிக் கல்வியை மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் கொண்டு வருவது முன்னுக்குப் பின் முரணாகத் தெரியவில்லையா? இளம்வயதிலேயே நுழைவுத் தேர்வு நடத்தி, தரமான குழந்தைகள் என்றும், தரமில்லாத குழந்தைகள் என்றும் பிரிப்பது அறிவுசார் பாகுபாட்டுக்கு வழிவகுக்காதா?
மேலும், பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை அனைவருக்கும் தரமான, சமச்சீரான கல்வியை இலவசமாக அளிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும். இதற்கு மாறாகப் பின்தங்கிய பகுதியில் ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளியைத் தொடங்குவது, பெரும்பான்மையான மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தர வேண்டிய கடமையிலிருந்து அரசாங்கம் பின் வாங்குவதாகும்; செம்மொழி மாநாடு நடத்தி தாய்மொழிக்குச் சிறப்புச் சேர்த்திருக்கும் அரசு, ஆங்கிலப் பள்ளிகளைத் திறப்பதன் மூலம் பழியையே சுமக்க வேண்டிவரும்.
ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் இன்றைய சூழலிலும் பள்ளிக் கல்வியில் 85 விழுக்காடு மாணவர்கள் தமிழில்தான் பயின்று வருகிறார்கள். ஆனால், இந்த ஏழை-எளிய மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உரிய இடங்கள் கிடைப்பதில்லை என்பதே மிகப்பெரிய சோகம்.
உண்மையான சமச்சீர் கல்வி என்பது பொதுப்பள்ளிகள் மற்றும் அருகாமைப் பள்ளிகள் மூலமாகவும், அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழியே பயிற்றுமொழி என்ற இலக்கை அடையும்போதுதான் முழுமையடையும். அத்துடன் இப்போது பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் "மாநிலத்தில் சுயாட்சி' என்பதும், "மத்தியில் கூட்டாட்சி' என்பதும் பொருத்தமாக இருக்கும். ""தமிழா! பயப்படாதே. ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்...'' என்று பாரதி அன்றே கட்டளையிட்டார். ஆனால், நாம் இப்போதும் பயந்து நடுங்குகிறோம்.
ஓர் அரசாங்கத்துக்கு வழிகாட்ட வேண்டிய கடமை கல்வியாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் வழிநடக்கும் அரசே மக்கள் நல அரசாகும்; அது மக்கள் பக்கமே நிற்கும்; மக்களும் அதன் பக்கமே நிற்பர்.
தேர்தல் வரும்; போகும்; தேசம் நிலையானது; மக்களும் அப்படித்தான்; மக்களை மறந்துவிட்டு தேசத்தைக் காப்பாற்ற முடியாது.

- தமிழன்

No comments: