Tuesday, August 17, 2010

எந்திரன் திரை விமர்சனம்...






திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது.

படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா ரோபோ எப்படி தமிழ்நாட்டுக்கே நம்பர் ஒன் ரோபோவாக மாறுகிறது என்பதுதான் கதையின் சாரம்.

தொடக்கத்தில் விறுவிறுப்பாக தொடங்குகிறது படம். ஆரம்பக் கட்டத்தில் திருக்குவளையில் இருக்கும் கருணா ரோபோ, திமுக என்ற கம்பெனியில் தனது பாதத்தை மட்டும் எடுத்து வைக்கிறது. பாதத்தை மட்டும் வைத்த ரோபோ, ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்த கதையாக, மொத்த கம்பெனியையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தனது குட்டி ரோபோக்களை வைத்து, அந்தக் கம்பெனியில் உள்ள மற்ற ரோபோக்களை காலி செய்வது கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது.
மற்ற ரோபோக்களைப் போல அல்லாமல், கருணா ரோபோவுக்கு அசாத்திய பேச்சுத் திறமை. மற்ற ரோபோக்கள் தங்கள் பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கையிலேயே, திமுக கம்பேனியை உருவாக்கிய அண்ணா ரோபோவிடம் நெருக்கமாகிறது கருணா ரோபோ. ஆனால் கருணா ரோபோவுக்கு அண்ணாவிடம் இருக்கும் செல்வாக்கைப் போலவே, எம்ஜிஆர் ரோபோவும், அண்ணா ரோபோவிடம் நெருக்கமாக இருக்கிறது. இது கதாநாயக கருணா ரோபோவுக்கு அறவே பிடிக்கவில்லை.

எம்ஜிஆர் ரோபோவை எதிர்க்கலாம் என்று பார்த்தால், அந்த ரோபோவுக்கு மற்ற ரோபோக்களிடம் இருக்கும் செல்வாக்கு பிரமிக்க வைக்கிறது. சரி வேறு வழியில்லை, உறவாடிக் கெடுக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறது கருணா ரோபோ.

எம்ஜிஆர் ரோபோவிடம் நெருக்கமாக உறவாடி, தன்னை திமுக கம்பேனியின் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்குமாறு கருணா ரோபோ கேட்டுக் கொண்டதை எம்ஜிஆர் ரோபோ நம்பி, கருணா ரோபோவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருகிறது. ஆனால், கருணா ரோபோ, ஏற்கனவே திட்டமிட்டுருந்தது போல, எம்ஜிஆர் ரோபோவிடம் பேட்டரிகள் எண்ணிக்கை குறைகிறது என்று கணக்கு கேட்டு குற்றம் சாட்டுகிறது. இருக்கும் அத்தனை பேட்டரிகளையும், கருணா ரோபோவிடம் கொடுத்திருந்தும், தன்னிடம் கணக்கு கேட்டதைக் கண்டு அதிர்ச்சியான எம்ஜிஆர் ரோபோ, திமுக கம்பேனியை உடைத்து, அதிமுக என்ற தனிக் கம்பேனியை ஆரம்பிக்கிறது.

இதற்கிடையே இந்திரா என்ற தலைமை ரோபோ, இந்தியா முழுவதும் ரோபோக்களின் நடமாட்டத்தை தடை செய்யும் வகையில், நெருக்கடி நிலை ஒன்றை செயல்படுத்துகிறது. இதையடுத்து, கருணா ரோபோ, இந்திரா ரோபோவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது.

இந்த நெருக்கடி நிலை சமயத்தில், கருணா ரோபோ, ரோபோ தயாரிப்பில் பேட்டரிகள், சிப்புகள், ஐசிக்கள் வாங்குவதில் முறைகேடு செய்து விட்டதாக, சர்க்காரியா என்ற நீதிபதி ரோபோவை விசாரிக்க உத்தரவிடுகிறார். அந்த சர்க்காரியா ரோபோ, ரோபோக்களுக்கே உரிய நேர்த்தியுடன் கருணா ரோபோ, விஞ்ஞான முறையில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்.

இந்த நீதிபதி ரோபோவின் தொல்லையிலிருந்து விடுபட, இந்திரா ரோபோவிடம், தனது பேட்டரியை கழற்றி காலில் வைத்து மன்னிப்பு கேட்கிறது கருணா ரோபோ. இந்திரா ரோபோவும், போனால் போகிறது என்று நீதிபதி சர்க்காரியா ரோபோ கொடுத்த விசாரணை அறிக்கையை, கழுதை ரோபோக்களுக்கு தின்னக் கொடுத்து விடுகிறார்.

இதற்கிடையே கருணா ரோபோ, ஒரு மூன்று பெண் ரோபோக்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு ஏகப்பட்ட குட்டி ரோபோக்களை தயாரித்து தமிழகமெங்கும் அனுப்புகிறது. அந்த குட்டி ரோபோக்கள் செய்யும் அட்டூழியங்கள் கடைசியில் கருணா ரோபோவுக்கே வினையாக வந்து முடிகிறது.

எம்ஜிஆர் ரோபோ, பிரிந்து தனிக் கம்பேனி தொடங்கியதும், கருணா ரோபோ, திமுக கம்பேனியை நடத்த முடியாமல் கடும் சிரமப் படுகிறது. எப்படியாவது, எம்ஜிஆர் ரோபோவை ஒழித்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்கிறது. ஆனால் எம்ஜிஆர் ரோபோவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு கருணா ரோபோவை மண்ணைக் கவ்வச் செய்கிறது.

எம்ஜிஆர் ரோபோவுக்கு முக்கியமான இரண்டு சிப்புகளும் பழதடைந்து ரிப்பேர் செய்வதற்காக அமேரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் ரோபோ ரிப்பேர் கம்பேனிக்கு செல்கிறது. கருணா ரோபோ இந்த கேப்பில் கடா வெட்ட முயற்சி செய்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாமல் கருணா ரோபோ மண்ணைக் கவ்வுகிறது.

இந்நிலையில் எம்ஜிஆர் ரோபோ மிகவும் ரிப்பேராகி, இனி சரிசெய்ய முடியாது என்ற நிலையில் பேட்டரி தீர்ந்து போய் செயலிழந்து விடுகிறது.

இந்த நிலையில் தான் கதையில் இடைவேளை. இடைவேளை முடிந்ததும் எம்ஜிஆர் ரோபோ செயலிழந்து விட்டதால், கருணா ரோபோவுக்கு ரோபோ தலைவர் பதவி கிடைக்கிறது. இனிமேல் கருணா ரோபோவுக்கு எதிரிகளை கிடையாது என்று நினைக்கும் வேளையில், எம்ஜிஆர் ரோபோ கம்பேனியில் இருந்து ஜெயலலிதா என்ற பெண் ரோபோ திடீரேன்று கிளம்பி, கருணா ரோபோவுக்கு பெரும் தலைவலியாக உருவாகிறது.

ஜெயலலிதா ரோபோவுக்கு பின் மற்ற ரோபோக்கள் அணி திரள, கருணா ரோபோ திகைக்கிறது. அகில இந்திய ரோபோக்களின் தலைவன் ஒரு விபத்தில் இறந்ததால் ஏற்பட்ட அனுதாப அலையில் ஜெயலலிதா ரோபோ ரோபோக்கள் தலைவராகிறது. ஆனால் தலைவரானதும், ஜெயலலிதா ரோபோவின் போக்கு மிக மிக மோசமாக இருப்பதால், கருணா ரோபோவுக்கு மீண்டும் அடிக்கிறது யோகம். இப்போது கருணா ரோபோவுக்கு பதவி வந்ததும் ஜெயலலிதா ரோபோவை, கோடவுனில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோவை சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல், அந்த ரோபோவுடன் இருக்கும் மற்ற அல்லு சில்லு ரோபோக்களையும் சிறையில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோ, இவ்வாறு கோடவுனின் அடைத்ததை மறக்காமல், ஐந்து ஆண்டுகள் கழித்து தனக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவை நள்ளிரவில் பிடித்து கோடவுனின் அடைக்கிறது. இது கருணா ரோபோவை மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவ்வாறு கோடவுனில் அடைக்கையில், கருணா ரோபோ “அய்யோ கொலை பண்றாங்க, அய்யோ கொலை பண்றாங்க“ என்று கதறுவது பெண் பார்வையாளர்களை உருக்குகிறது.

இந்தப் போக்கு இப்படியே தொடரும் நிலையில், கருணா ரோபோவுக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை கருணா ரோபோ மிக சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறது. தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவின் குட்டி ரோபோக்கள் தமிழகமெங்கும் செய்யும் அட்டூழியங்களை கருணா ரோபோ கண்டு கொள்ளாமல் இருப்பது, கதையின் ஹீரோ கருணாநிதி ரோபோவை வில்லன் போலச் சித்தரிக்கிறது.

இந்த முறை தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோ, ஜாபர் சேட் என்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறது. இந்த ஜாபர் சேட் ரோபோ, மற்ற ரோபோக்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு கருணாநிதி ரோபோவிடம் சொல்வது போல் அமைந்துள்ள காட்சி மிகவும் புதுமையானது.

உலகில் எந்த ரோபோவும் செய்யாத புதுமையை கருணா ரோபோ செய்கிறது. மற்ற ரோபோக்கள் படும் துன்பத்தை பார்த்து மனம் வருந்தி, உண்ணாவிரதம் இருக்கிறது, மனிதச் சங்கிலி நடத்துகிறது, போராட்டம் நடத்துகிறது. ஆனால் இது எதுவுமே எடுபடாததால் மிகவும் மனம் வருந்துகிறது கருணா ரோபோ.

இந்த வருத்தத்தில் இருந்து விடுபட, ஒரு புதிய கம்பேனியை உருவாக்குகிறது கருணா ரோபோ. அந்த கம்பேனியின் வேலையே, கருணா ரோபோவை பாராட்டுவதுதான். இந்த பாராட்டு மழையில் நனைந்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆனந்தமாக இருக்கிறது கருணா ரோபோ. அந்த பாராட்டு கம்பெனியின் தலைவராக ஜெகதரட்சகன் ரோபோவை நியமிக்கிறது கருணா ரோபோ. அந்தக் கம்பெனியின் மற்ற ரோபோக்கள், துரைமுருகன் ரோபோ, தமிழச்சி ரோபோ, சுப.வீரபாண்டியன் ரோபோ, கமலஹாசன் ரோபோ, ரஜினிகாந்த் ரோபோ, வாலி ரோபோ, வைரமுத்து ரோபோ. இந்த பாராட்டு கம்பேனி ரோபோக்கள் அடிக்கும் கூத்துக்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

கமலஹாசன் ரோபோ, ரோபோவை கண்டுபிடித்ததே கருணா ரோபோதான் என்று பேச, ரோபோவுக்கு தமிழ் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, வாலி ரோபோ, தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழிகளையும் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள், சிகரெட் பிடிக்க கூட்டம் கூட்டாக வெளியே செல்வதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா ரோபோவின் கதை முடிந்து விட்டது என்று நினைக்கும் வேளையில், ஜெயலலிதா ரோபோ, கோயம்பத்தூரிலும், திருச்சியிலும், ரோபோக்களின் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி கருணா ரோபோவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.

இந்த இரு ரோபோக்களுக்கும் நடக்கும் போட்டியின் கிளைமாக்ஸ் 2011ல் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை திரையில் காண்க.

கருணா ரோபோவுக்கு பத்மாவதி ரோபோ, தயாளு ரோபோ, ராசாத்தி ரோபோ என்று மூன்று ஹீரோயின்கள். இந்த மூன்று ஹீரோயின்களில் பத்மாவதி ரோபோவின் பேட்டரி படத்தின் தொடக்கத்திலேயே செயலிழந்து விடுகிறது. மற்ற இரண்டு ஹீரோயின் ரோபோக்களும், திரையில் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், கருணா ரோபோ எடுக்கும் முடிவுகளிலும், நடவடிக்கைகளிலும் இவர்களின் பெரும் பங்கு இருக்கிறது என்பதை பார்வையாளர்களால் எளிதாக உணர முடிகிறது.

கருணா ரோபோ, “நான் நின்னா தமிழ், நடந்தா பாரசீகம், பேசுனா உருது, பாடுனா வங்காளம், மொத்தத்துல நான் கலைக்களஞ்சியம்டா“ என்று பேசும் பன்ச் டயலாக்குகள் எடுபடவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு அழகிரி ரோபோ. வெளிச்சம் பத்தாத இடங்களில், பத்திரிக்கை அலுவலக ஊழியர்களை எரித்து லைட்டிங் எஃபெக்ட் கொடுக்கிறார். ஆடியோ மற்றும் லைட்டிங் ஆற்காடு ரோபோ. பல நேரங்களில் ஆடியோ மந்தமாகவும், லைட்டிங் பற்றாமல், இருட்டில் பல காட்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.

சவுக்கு
--

No comments: