எலுமிச்சம் பழத்தை நசுக்கி வாகனம் புறப்பட்டால்விபத்தும் நடக்காதா?
மதச் சார்பின்மை படும் பாடு
இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் எடுத்த எடுப்பிலேயே தன்னை மதச்சார்பற்ற
அரசு என்று பிரகடனப்படுத்தி விட்டது.
அத்தோடு நிற்கவில்லை; அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியில் (51ஏ) விஞ்ஞான
அணுகுமுறை, மனிதாபிமானம், ஆராய்ச்சிக்கு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை
வளர்த்தெடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள், அலுவலர்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டு
வருகிறார்கள் என்பது பெரிதும் வெட்கக்கேடானது.
சாதாரண மக்கள் மட்டுமல்லர்; விஞ்ஞானிகள் என்று கருதப்படக் கூடியவர்கள்கூட
அவர்களின் படிப்புக்கும், பார்க்கும் உத்தியோகத்துக்கும் சற்றும்
சம்பந்தமில்லாமல், பாமரத்தன்மைக்கும் கீழாக அருவருக்கத்தக்க வகையில், மூட
நம்பிக்கைச் சேற்றை முகத்தில் அப்பிக் கொள்பவர்களாகக் காட்சி
அளிக்கிறார்களே, இது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு!
கிழக்கு மண்டல இந்தியக் கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டக்
சி.ஜி820 புதிய ஹெலிகாப்டரைக் கடலோர காவல் படைக் காவல்துறைத் தலைவர்
(அய்.ஜி.) ஜெனரல் ராஜசேகர் மாலை அணிவித்துத் தொடங்கி வைத்தார். புதிய
வாகனங்களுக்குப் பூஜை போடும்போது டயருக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை
வைத்து நசுக்குவதுபோல ஹெலிகாப்டர் சக்கரத்தின்கீழ் எலுமிச்சம் பழங்கள்
வைக்கப்பட்டு, விமானத்தை இழுத்து நசுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் இவர்கள் தெரிவிப்பது என்ன? எலுமிச்சம் பழத்தை நசுக்கி புதிய
வாகனம் புறப்பட்டால் எந்தவித விபத்தும் நடக்காது என்றுதானே சொல்ல
வருகிறார்கள்?
இதுவரை இவ்வாறு செய்து வந்துள்ளனரே விபத்துகள் நடக்காமல் இருந்தனவா? சாலை
விபத்துகள் மட்டுமல்ல, விமான விபத்துகள்பற்றி நாள்தோறும் செய்திகள்
வந்தவண்ணமாகத்தானே உள்ளன. விலை மதிக்கப்பட முடியாத மனித உயிர்கள்
பலியாகின்றனவே இதற்கெல்லாம் என்ன சமாதானம்?
எலுமிச்சம் பழம் வைத்து நசுக்காத விமானங்கள் தான் விபத்துக்கு ஆளாகின
என்று சொல்லப் போகிறார்களா?
இதைவிட இன்னொரு வெட்கக்கேடு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்
(இஸ்ரோ) செயல்பாடுகள்.
புதிதாக ராதாகிருஷ்ணன் என்பவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு
இருக்கிறார். இவர் பதவியேற்றவுடன் அவசர அவசரமாக குருவாயூரப்பன்
கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை கொடுத்தார்.
அதன்பின் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி.பி3 ராக்கெட் விண்ணில்
ஏவப்படுவதாக இருந்தது. அதற்குமுன் இஸ்ரோவின் புதிய தலைவரான ராதாகிருஷ்ணன்
என்ன செய்தார்? தமது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத்
தரிசித்தார். ஜி.எஸ்.எல்.வி. பி3 ராக்கெட்டுக்கான திட்ட அறிக்கையை
ஏழுமலையான் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டார்.
திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராக்கெட் வெற்றிகரமாக
ஏவப்படுவதற்காக ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறினார்.
முடிவு என்ன? குறிப்பிட்ட தேதியில் ஏவப்பட்ட அந்த ராக்கெட் இஸ்ரோவின்
கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.
இதற்கு இஸ்ரோ தலைவர் என்ன சொன்னார்?
ராக்கெட்டின் கிரையோஜெனிக் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா
என்பது உறுதியாகத் தெரியவில்லை. ராக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு
நாள்களில் கண்டு அறியப்படும் என்றுதான் சொன்னாரே தவிர, ஏழுமலையானைத்
தரிசித்துப் பயன் இல்லை என்று அறிவு நாணயத்துடன் ஒப்புக்கொள்ள
முன்வரவில்லை.
அந்த ராக்கெட் மற்றும் ஜிசாட்4 செயற்கைக்கோளின் மதிப்பு எவ்வளவு
தெரியுமா? ரூ.420 கோடியாகும். இதில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் ரூ.170
கோடியாகும்.
மக்கள் பணம் இதுபோன்ற மதவாதிகளால் நட்டப்பட்டதற்கு யார் பொறுப்பு?
இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மைக்கு விரோதமாக நடந்துகொண்டது; போதுமான
திறமையும், பொறுப்பும் இல்லாததால் ஏற்பட்ட நட்டம் இவைகளுக்காக
சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியான முடிவாக
இருக்கமுடியும்.
விடுதலை” தலையங்கம் 29-7-2010
காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!
12 hours ago
No comments:
Post a Comment