தற்போது 'தேசத்துரோகி' 'தேசபக்தன்' என்ற சொற்தொடர்களை பயன்படுத்துவது ஒரு உயர் கலாச்சாரமாக ஆகிவிட்டது. முன்னொரு காலத்தில் முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம், பூர்சுவா என்ற சொற்பதங்;களை அதற்குரிய உண்மையான அர்த்தம் தெரியாமல் அவ்வாறு சொல்வதும், எழுதுவதும் அறிவுஜீவித்தனம் என்று சிலர் பாசாங்கு செய்து கொண்டிருந்ததைப் போலவே இப்போது 'தேசத்துரோகி' தேசபக்தன்' என்ற இந்த சொற் தொடர்களை பாவிப்பதன் மூலம் சிலர் தங்களுடைய தவறுகளை அதற்குள் மறைத்து தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.
துரோகி எதிர் தியாகி என்ற சொற்பதங்கள் குறிக்கும் அர்த்தங்கள் அவற்றை பிரயோகிக்கும் நபர்கள் மற்றும் காலம், இடம் என்பவற்றைப் பொறுத்து வேறுபடக் கூடியவை. இவற்றின் உண்மையான அர்த்தத்தை தீர்மானிக்கும் போது யார் யாருக்கு துரோகி? அல்லது யார் யாருக்கு தியாகி? தனி நபர்களுக்கா? அல்லது ஓரு குழுவுக்கா? அல்லது ஓரு அமைப்புக்கா? அல்லது ஓரு சமூகத்துக்கா? அல்லது ஒரு இனத்துக்கா? அல்லது ஒரு தேசத்துக்கா? என்கின்ற இத்தனை கேள்விகளுக்கும் விடை காணப்பட வேண்டும். தேசிய அளவில் மக்களின் அங்கீகாரத்தை பெறாத ஓரு தனிநபரால் அல்லது ஒரு குழுவால் துரோகியாக அடையாளப்படுத்தப்படும் ஒருவர் ஒரு சமூகத்துக்கு ஒரு இனத்துக்கு அல்லது ஒரு தேசத்துக்கு துரோகியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
உதாரணமாக 2002 ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய போது அதுவரை ஒட்டுக் குழுக்கள் என்று விமர்சிக்கப்பட்டு வந்த ஈபிஆர் எல்எப் அமைப்பைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் டெலோ அமைப்பைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதில் இணைந்தனர். அப்போது அவர்களது அமைப்புகளை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் சிலரும் தீவிரமான புலி எதிர்ப்பாளர்களும் அவர்களை துரோகிகள் என்றார்கள். தேசியத் தலைவர் அவர்களை தேசியத்துக்கான செயற்பாட்டாளர்களாக ஏற்றுக்கொண்டார்.
அதேபோல ஒருகாலத்தில் அவர்கள் கொல்வதற்காக சென்று அவயங்களை இழந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இந்த இருவரும் மறைந்த பிரிகேடியர் தமிழ்செல்வனை சந்திப்பதற்கு கிளிநொச்சிக்கு வந்தபோது அதை ஒரு தேசியக் கடமையாகக் கருதி வரவேற்றார்கள்.
ஏனவே ஓருவரை துரோகி என்று அடையாளப்படுததும் ஒரு தனி நபர் அல்லது ஒரு குழுவினர் சமூகத்தில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கின்றனர்,அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்களா? என்ற கேள்வியை பொறுத்தே அவர்களது இந்தச் சொல்லாடல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆனால் இன்றைக்கு தங்களிடம் அதிகாரமும் பணமும் ஊடமும் கையில் இருக்கிறது என்றவுடன் எழுந்தமானத்தில் சர்வசாதாரணமாக எல்லோரையும் துரோகி என்று முத்திரை குத்தும் ஒரு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வளாச்சிக்கும் தமிழீழ விடுதலைக்கும் தங்களது இளமையை கல்வியை வாழ்வை அர்ப்பணித்து பலவேறு போர்களங்களிலே நின்று களமாடி அவங்களை இழந்து முள்ளிவாயக்காலின் இறுக்கணங்கள் வரை களத்திலே நின்று தலைமையின் கட்டளைக் கிணங்க எதிரியிடம் சரடைந்த போராளிகள் கூட இவர்களின் துரோகிகள் என்ற முத்திரை குத்தலில் இருந்து தப்பமுடியவில்லை.
கடந்த வாரம் அங்க இழப்புகள் காரமாக இனிமேல் எதற்கும் பிரயோசனமற்ற நபர்கள் என்று கருதி சிறீலங்கா அரசு விடுதலைசெய்த சில போராளிகள் இங்கே புலத்தில் உள்ள ஊடக தேச பக்தர்களை தொடர்பு கொண்டபோது நீங்கள் சிறிலங்கா அரசின் ஆட்கள் அதனால்தான் அவர்கள் உங்களை வெளியே விட்டிருக்கிறார்கள் நீங்கள் துரோகிகள் என்று கூறி அவர்களுடன் பேச மறுத்திக்கிறார்கள்.
சிங்கள இராணுவம் எங்களை பயங்கரவாதி என்றும் கொட்டியா என்றும் அடித்து உதைத்து சித்திரவதை செய்து அவமானப்படுத்தியதைவிட இது மிகக் கொடுமையானதாக இருந்ததாகவும்;, இதைவிட நாங்கள் போர்க்களத்திலே உயிரை விட்டிருக்காலாம் என்றும் அந்தப் போராளிகள் எமது ஊடக நண்பர்களிடம் சொல்லியழுதுதிருக்கிறார்கள்.
ஆவர்களுடைய ஆதங்கம் எல்லாம் எங்களுக்கு நீங்கள் பண உதவியோ, பொருள் உதவியோ செய்யத்தேவையில்லை ஆறுதலாக எங்களுடன் இரண்டு வார்த்தை கதையுங்கள், எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள் என்பது தான்.
இதேபோல மாவீரன் புகழ் மாறனின் இரத்த உறவினர் அவர் விதைக்கப்பபட்ட கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்றபோது அது இடித்தழிக்கப்பட்டு காடாகி இருந்தது. கவனிப்பாரற்று இருக்கும் அந்த துயிலும் இல்லத்தில் எலும்பும் தோலுமாக உயிரை மட்டுமே உடலில் சுமந்து இருக்கும் ஒரு ஜீவன் அங்கே உறங்கிக் கொண்டிருந்தது. அவரை விசாரித்தபோது அவர் நான்கு மாவீரர்களின் தந்தை என்றும் தனது மனைவியைக் கூட முள்ளிவாய்கால் பேரவலத்தில் பறிகொடுத்து விட்டு யாருமற்ற அனாதரவான நிலையில் தனது பிள்ளைகள் விதைக்கப்பட்ட அந்த புனித பூமியில் தனது இறுதிக்காலத்தை கழிப்பதற்காக அங்கேயே தங்கி இருப்பதாகவும் தெரியவந்தது.
பலமுறை சிங்கள இராணுவத்தினர் அடித்து, உதைத்து சித்திரவதை செய்தபோதும் அந்த இடத்தைவிட்டு வெளியேறாமல் எப்போதாவது யாராவது கொண்டு வந்து கொடுக்கும் உணவை உண்டு வாழும் அந்த மனிதனை கூட அந்த மாவீரர் துயிலும் இல்லத்துக்கு வருபவர்களைக் கண்காணிக்கும் சிறிலங்கா இராணுவ உளவாளிp என்றும் துரோகி என்றும் இங்குள்ள சிலர் முத்திரை குத்தியிருக்கிறார்கள்.
இந்த இடத்திலே யார் துரோகிகள், துரோகிகளுக்கு உரிய அர்த்தம் என்ன என்ற கேள்விகள் மீண்டும் எழுகின்றன.
சிறிலங்கா அரசு தமிழ் மக்களை இராணுவ ரீதியாக தோற்றடித்து விட்ட நிலையில் அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்காக எங்களுடைய விரல்களைக் கொண்டே எங்களது கண்ணை குற்றுவதற்கு கட்டவிழ்த்து விட்ட அரசியல் ஆயுதம் தான் துரோகிகள், தேசத்துரோகிகள் என்ற சொல்லாடல்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தாய்நிலம்
Friday, August 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment