Thursday, August 19, 2010

காக்கி உடையில் காட்டுமிராண்டிகள்மீண்டும் காக்கி உடை தனது கோர முகத்தை காட்டியிருக்கிறது. கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி. காவல் துறை எப்போதும் காட்டுமிராண்டித் துறையாகவே இருந்து வந்திருக்கிறது. பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதானாலும் சரி, பிடித்தவர்கள் வீட்டில் சட்டி கழுவுவதானாலும் சரி, மனித உரிமை ஆர்வலர்ளை தீவிரவாதிகள் போல சித்தரித்து, சமயம் கிடைக்கும் போது, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதானாலும் சரி, அவ்வாறு சிக்கியவர்களை அடித்துத் துவைப்பதானாலும் சரி. இரண்டு ஆட்சிகளிலுமே காவல்துறையினர் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம், ஆட்சியாளர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனம் தேவைப் படுவதுதான். ஜெயலலிதாவுக்கு, கருணாநிதியை நள்ளிரவில் கையை முறுக்கி கைது செய்ய காட்டு மிராண்டிகள் தேவை. கருணாநிதிக்கு, ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அடித்துத் துவைக்க காட்டுமிராண்டிகள் தேவை.

அதனால், இரண்டு திராவிட கட்சிகளுமே காக்கிச் சட்டைகளை கையைக் காட்டினால் கடிக்கும் வேட்டை நாய்களாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன.

அந்த வேட்டை நாய்களுக்கு இரையானவர்தான் தோழர் இனியன். இவரின் இயற்பெயர் அஷோக் குமார். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். பெயருக்கேற்றார் போல இனியவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

சவுக்கு முதன் முதலாக இனியனை சந்தித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஒடிசலாக ஐந்தடி உயரத்தில் ஒரு உருவம். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகத்தில் தான் இனியனை சவுக்கு சந்தித்தது. அமைதியாக இருப்பார். அலுவலகத்துக்கு வந்தால் எதுவுமே பேச மாட்டார். சவுக்கு அவரிடம் பேசி கலாட்டா செய்தால் கூட, மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியாகத் தான் இருப்பார்.

மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர். மதியம் உணவு உண்ண காசு இருக்காது. மதியம் கல்லூரி தொடங்கும் என்பதால், சவுக்கும் நண்பர்களும் உண்ணச் செல்லும் போது, அவரை கட்டாயம் அழைத்துச் செல்வோம். வழக்கறிஞர் புகழேந்தி அவரை காலை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி நீதிமன்றம் சென்று, அங்கே நடக்கும் வழக்கு விவாதங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அறிவுரையை ஏற்று, ஒரு வாரம் சென்றார். அங்கே ஆங்கிலத்தில் படித்த துரைகள் வாதாடுவதை கண்டு ஒன்றும் புரியாமல், பிறகு அலுவலகத்திலேயே இருப்பார். ஏதாவது வேலை சொன்னால் புன்னகையோடு செய்வார்.

இதுதான் இனியவன். அவர் படிப்பை தொடர, அமைப்பு பொருள் உதவி செய்து வந்தது. பிறகு சில நாட்கள் கழித்து, அமைப்பிடம் பொருள் உதவி பெறுவதற்கு சங்கடப் பட்டுக் கொண்டு, நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று கூறி விட்டார்.

அமைதியாக இருந்த இனியவனின் மற்றொரு முகம் செங்கல்பட்டு அகதிகள் முகாமில், ப்ரேம் ஆனந்த் சின்கா என்ற எஸ்பியும், சேவியர் தன்ராஜ் என்ற உதவி எஸ்.பியும், சேர்ந்து நடத்திய நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தார். போஸ்டர் ஒட்டுவது முதல் ஆர்ப்பாட்டத்திற்கான அத்தனை வேலைகளையும் முன் நின்று செய்தார். செங்கல்பட்டு அகதிகள் மீதான காவல்துறையினரின் கொடிய தாக்குதல், அவரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.

இப்படி பம்பரமாகச் சுற்றி அவர் செய்த வேலையே அவருக்கு வினையாக முடிந்தது காலத்தின் கோலம் தானே… ?

செங்கல்பட்டு அகதிகள் மீதான தாக்கதலில் முன் நின்று தாக்குதலை நடத்தியவர் அப்போது செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட் வில்சன் என்பவர்.

நேற்று மாலை 6 மணியளவில் இனியன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் வேற்று மொழிக்காரர் ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் பேருந்தை திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓட்டுகிறார். அங்கே தகராறு செய்த இருவரும் இறக்கி விடப் படுகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்தானே… நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காவல் நிலையம் செல்கிறார்.

அங்கே இனியனை விசாரித்துக் கொண்டிருக்கும் போது குப்புசாமி என்ற காவலர், உதவி ஆய்வாளரிடம் “சார் இவன் மனித உரிமை இயக்கத்துல இருக்கான் சார். எப்போ பாத்தாலும் கூட்டம் போட்டு நம்மைத் திட்டுவான் சார்“ என்கிறார். உதவி ஆய்வாளர் “என்னடா எஸ்.சியா “ என்று கேட்கிறார். இனியன் ஆமாம் என்றதும் அருகில் இருந்த காவலர் குப்புசாமி பளாரென்று இனியன் கன்னத்தில் அறைகிறார். இனியன் “விசாரிக்காம அடிக்காதீங்க சார்“ என்கிறார்.

அப்போது அங்கே வந்த ஆல்பர்ட் வில்சன் “பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு பாத்தீங்களா ? “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். “இவன் துணிய அவருங்கையா ? ஹ்யூமர் ரைட்ஸா பேசறான் ? அடிக்கிற அடியில இந்தத் தேவடியாப் பையன் பேசவே கூடாது“ என்று சொல்லி முடிக்கும் முன்பே, அருகில் இருந்த காவலர்கள் சத்தினசாமி, நட்ராஜ், முனுசாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள், இனியனின் உடைகளை அவிழ்க்க பொறுமை இல்லாமல் கிழித்து எரிகின்றனர். நிர்வாணமாக நின்ற இனியன் இரண்டு கைகளையும் வைத்து தன்னை மறைத்துக் கொள்ள “என்னடா பொட்டையா நீ“ “எதுக்குடா மறைக்கிற “ என்று மறைத்த கைகளின் மேல் லத்தியால் அடித்திருக்கின்றனர்.

பிறகு ஒரு மணி நேரத்திற்கு சரமாரி அடி. பிறகு நிர்வாணமாகவே லாக்கப்பில் போட்டு அடைத்திருக்கிறார்கள். இனியன் நினைவிழக்கும் நிலையில் இருந்த போது, வாளியில் தண்ணீரை பிடித்து லாக்கப்புக்குள் ஊற்றியிருக்கிறார்கள்.

இரவு 3.30 மணி அளவில் இனியனின் உறவினர்கள் வந்து இனியனை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர். அனைவரும் கண்ணயர்ந்த நேரம் மருத்தவமனையிலிருந்து வெளியேறிய இனியன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குற்றுயிரும், குலை உயிருமாக இனியனை இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

நீங்கள் செய்த காரியத்தை மன்னிக்க முடியாது தோழர் இனியன். உங்களை நிர்வாணப் படுத்தி அடித்த ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணின் சங்கை அறுத்திருந்தீர்களென்றால் பாராட்டியிருக்கலாம். ஆனால், நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது.

இனியன் தற்கொலை முயற்சி செய்தி, காற்றிலே வதந்தியாக மாறி, இனியன் இறந்து விட்டார் என்று சட்டக் கல்லூரி வளாகங்களிலே பரவுகிறது. தகவல் அறிந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் உடனடியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை மறிக்கிறார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மற்ற எல்லா போராட்டங்களையும், காவல்துறையை விட்டு ஒடுக்க முயற்சிக்கும் கருணாநிதி, இந்த மாணவர்களின் எழுச்சியை பார்த்து பம்மினார். காவல்துறை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இணை ஆணையர் சேஷசாயி மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜா தேவிதான், பனையூர் இரட்டை கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டு காவல் நிலையத்தில் இறந்த ராஜன் மரணத்தையும், திண்டுக்கல் பாண்டி என்கவுண்ட்டரையும் விசாரித்தது. அந்த அதிகாரி எப்படி அறிக்கை கொடுப்பார் என்று தெரியாதா ?

ஆனால் மாணவர்கள் மசியவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை. சம்பந்தப் பட்ட காவல்துறையினரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இதற்கு நடுவே, மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், மாணவர்கள் போராட்டம் நடத்தவதையும் பற்றி முறையிட்டார். அவரை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அதையே ரிட் மனுவாக கருதி, மாலை 5 மணிக்கு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் இறுதியில் பாதிக்கப் பட்ட மாணவர் உடனடியாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இனியன் கொடுத்த புகார் மனுவின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.

மூன்று வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் விபரங்களை வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாலை 6.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் சொன்னார். விபரங்களை கேட்டறிந்த மாணவர்கள் பலத்த கரகோஷத்தோடு கலைந்து சென்றார்கள்.

நீதிமன்ற உத்தரவுப் படி காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. என்ன தெரியுமா ? ஒரே ஒரு பிரிவு தான். 323. இது என்ன தெரியுமா ? லேசான காயத்தை ஏற்படுத்தவது. இது பிணையில் வரக்கூடிய பிரிவு என்பது முக்கிய அம்சம்.
ஏதோ ஒரு வகையில் இந்த அளவுக்காவது நிவாரணம் கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி.

இந்த போராட்டத்தில் இருந்த முக்கிய செய்தி என்னவென்றால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மாநகரின் ஒரு முக்கிய சந்திப்பை மாணவர்கள் மறித்து எந்த வாகனத்தையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்களே ? இதனால் பொதுமக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்ற அக்கறை துளியும் காவல்துறையினருக்கோ, கருணாநிதிக்கோ இல்லை. ஏழு மணி நேரமாக அந்த சாலைகள் மறிக்கப் பட்டே கிடந்தன. இரு சக்கர வாகனங்களை கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

இது போல பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி நடக்கும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரை எங்காவது கண்டிருக்கிறீர்களா ?

இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ? ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே…. என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் ? என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.

அவர் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டோடு இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள், ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீது அவருக்கு வந்திருக்கும் மோசடி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எப்படி மூடுவது, புகார் கொடுத்தவர் நீதிமன்றம் போனால் அதை எப்படி சமாளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்.

இப்படிப் பட்ட ஒரு மோசமான நிர்வாகத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?

No comments: