Wednesday, August 25, 2010
இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன் - நியாயம் கேட்கிறார் சீமான்
இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை என இயக்குனர் சீமான் சீற்றத்துடன் கேட்டார்.
இந்திய நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கடந்த மாதம் 12ம் தேதி தமிழக அரசு சீமானை சிறையில் அடைத்தது. தேசிய பாதுகாப்பச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்து, நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்நதார். இறுதியாகக் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர் நேற்று வெளியே வந்த சீமான், மேற்படி தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி தனது தரப்பு வாதங்களைத் தெரிவித்திருந்தார்.
பொலிஸ் காவலுடன் வெளியே வந்த சீமான், ஆட்சியதிகாரம் சிறையிலடைந்துச் சிறுமைப்படுத்த நினைத்த போதும், 'இருப்பாய் தமிழா நெருப்பாய், இருந்தது போதும் செருப்பாய் ' என அவர் அடிக்கடி உச்சரிக்கும் வரிகளுக்கு ஏற்ப சீறும் சிறுத்ததையாகவே காணப்பட்டார். காவலுக்கிருந்த பொலிசாரையும் மீறிப் பத்திரிகையாளர்களிடம் தன் தரப்பு நியாயங்களைக் கேள்விகளாக உதிர்த்தார்.
இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை எனச் சீற்றத்துடன் கேட்டார். நான் பேசியது தவறு என்றால் இந்த குற்றத்தை தூண்டி விட்ட ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்குவது யார் ? சீமானை சிறையில் அடைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தமிழக அரசு பகல் கனவு காண்கிறது . மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறு என்றால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன் எனக் கர்ஜித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், அரசியலில் லாபம் அடைவதற்காக தாம் அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய சட்டம் 21ன் படி தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது தமிழனுக்கு கிடையாதா ? எனவும் கேட்டார்.
சீமானைச் சிறையிலடைத்ததின் மூலம், ஆளும் திமுக அரசு இரட்டை லாபம் அடையலாம் என திட்டம் தீட்டியது. ஒன்று காங்கிரஸ் தலைமைப்பீடத்திடம் நல்ல பெயர் எடுப்பது, மற்றொன்று தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு எல்லாம் இதுதான் கதி என மறைமுகமாக மிரட்டல் விடுப்பது, ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி, சீமான் தன் இலட்சியத்தின் வழியில் தொடர்ந்து பயணிக்கும் மிடுக்குடனேயே காணப்பட்டார் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment