Wednesday, August 25, 2010

யானை பார்த்த குருடர்களாகத் தமிழினம்ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறீங்கள்?’

என்ற கேள்விக்கு பொருத்தமான, தெளிவான பதிலை இன்றைய நிலையில் யாரும் தெரிவிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படியான குழப்பகரமான நிலையில் ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலமும் நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளும் இருக்கின்றன.நிகழ்கால நடவடிக்கைகளும் முயற்சிகளுமே எதிர்காலத்தை உருவாக்குகின்றன.

அதேவேளை அது நிகழ்காலத்தையும் பாதுகாக்கிறது.

இதுதான் பொதுவான விதி.

ஆனால், இந்த விதி ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியிலும் வாழ்க்கையிலும் வேறுவிதமாகவே விளையாடிக்கொண்டிருக்கிறது.

அது நிகழ்காலத்தையும் பாழடித்து, எதிர்காலத்தையும் பழுதாக்கிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக சிதைந்து போன நிகழ்காலத்தின் முன்னே இருக்கும் எதிர்காலத்துக்கான கேள்விக்குறியின் மீது குந்திக் கொண்டும் படுத்துறங்கிக் கொண்டுமே ஒவ்வொரு தமிழரும் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது. முப்பதாண்டு காலத்துக்கும் அதிகமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட, முதன்மைப் போராட்டக்காரரான ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். நான் மூன்று விதமான சவால்களை இந்த முப்பதாண்டுகால வாழ்க்கையிலும் எதிர்நோக்கியிருக்கிறேன்.

ஓன்று, நடந்து கொண்டிருந்த போராட்டத்தை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதற்கான சவால். அதற்காக இரவு பகலாக பல்வேறு நெருக்கடிகள், அபாயங்களின் மத்தியில் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி நிலைமைகளும் நிகழ்ச்சிகளும் அமையவில்லை. கண்ணுக்கு முன்னே அதுவரையான அத்தனை உழைப்பும் முயற்சிகளும் வீணாகி,வீழ்ச்சியடைந்ததைப் பார்த்தேன்.

அடுத்த சவால், நெருக்கடிக்குள்ளாகியிருந்த போராட்டத்தையும் போராட்டத் தலைமையையும் போராளிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒருநிலையில் ஏற்பட்ட சவால். இந்தச் சவாலுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் கடைசியில் வீணாகிவிட்டன.

இப்போது மூன்றாவது சவால் முன்னே வந்து நிற்கிறது. போரினால், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களையும் அந்த மக்களின் பிரதேசங்களையும் மீளக்கட்டியெழுப்பவேண்டும் என்ற சவால்.
இந்தச் சவாலை எப்படியும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேணும்’ என்று சொல்லி அவர் பெருமூச்சு விட்டார்.

இதுதான் உண்மை.

ஈழத்தமிழரின் அரசியற் போராட்டம் இன்று இப்படித்தான் ஒருநிலையில் வந்து நிற்கிறது.

வெற்றியடைந்திருக்க வேண்டிய போராட்டம், காப்பாற்றப்பட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டு, அதுவும் முடியாமல், இப்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. ஆகவே இப்போது தமிழரின் அரசியல் என்பது மீட்புப்பணியை மேற்கொள்வதாகவே இருக்க வேண்டும் என்றாகியுள்ளது.

இதை இன்னொரு நண்பர் இன்னொரு விதத்தில் சொல்கிறார்,

இப்போது தமிழரின் அரசியல் போராட்டம் முதலுதவிப் போராட்டமாக மாறியிருக்கிறது’ என்று.

இப்படி இந்தப் போராட்டம் சிதைந்துபோனமைக்கு சகல தரப்பினரும் பொறுப்பாளிகளே. வேண்டுமானால், விகித வேறுபாடுகள் ஒவ்வொரு தரப்புக்கும் இருக்கலாம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், மீண்டும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்காமல், மேலும் காலத்தை வீணாக்காமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணும்.

ஏனெனில், இது மீட்பு வேளை. பாதிக்கபட்ட மக்களை அவற்றிலிருந்த மீட்கும் நடவடிக்கை. அவர்களை மீட்டேயாக வேண்டிய கட்டாயம். மீட்புப் பணியில் தாமதத்திற்கு இடமேயில்லை. அங்கே நடவடிக்கைக்கே முதலிடம். விரைவே முன்மையாகும்.

ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அடிக்கடி சொல்வதைப் போல ‘உலகம் முழுவதிலும் இருக்கின்ற தமிழீழ விரும்பிகளுக்காக வன்னியிலும் வாகரையிலும் படுவான்கரையிலுமாக நான்கு லட்சம் மக்கள் சிலுவையைச் சுமந்தார்கள்’ என்பது இங்கே கவனிக்க வேண்டியது.
இதில் இறுதிப் போர் நடைபெற்ற வன்னியில், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை இன்னும் மோசமானது. இதைச் சகலரும் அறிவர்.ஆனால், இந்த மக்களின் மறுவாழ்வைப்பற்றிச் சிந்தித்து, இந்த மக்களை அவர்கள் சந்தித்திருக்கும் அத்தனை பாதிப்புகளிலிருந்தும் மீட்பதற்கு எவர், என்ன முயற்சி எடுத்திருக்கின்றனர்?

அரசாங்கம் இதில் இன்னொரு குற்றவாளியாகவே செயற்பட்டு வருகிறது.

போர்க்குற்றம் மட்டுமல்ல, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறுவதும் குற்றமே.

பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால உத்தரவாதங்களைச் சிதைப்பது பெரும் அடிப்படை மனிதவுரிமை மீறலாகும். ஆனால், உள்ளுர் அரசியல்வாதிகளிலிருந்து சர்வதேசம் வரை இந்தக்குற்றங்களைப் பார்த்துக் கொண்டு கைகளைப் பிசைகின்றனவே தவிர, இதற்கு மாற்றாக எந்த நடவடிக்கையும் எடுக்க முனையவில்லை.

போர் முடிந்து ஓராண்டாகிறது.

இதற்குள் நடைபெற்ற தேர்தல்களில் மும்முரமாக தமிழ் அரசியற்கட்சிகளே போட்டியிட்டிருக்கின்றன.

தாம் போட்டியிடாத ஜனாதிபதித் தேர்தலுக்குக் கூட, எத்தனையோ தடவை ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தி, ஊர் ஊராகச் சென்று மக்களிடம் ஆதரவு கேட்டுப் பெரும்பங்காற்றியிருக்கின்றன. ஊடகங்கள் கூட இந்தத் தேர்தல் திருவிழாக்களைக் கொண்டாடிய விதம் சிரிப்புக்கிடமானது.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அரசியற் போராட்டமும் வந்து நிற்கின்ற நிலையும் இடமும் பற்றிய கவலைகளை யாரும் பெரிதாக உணர்ந்த மாதிரி இல்லை.

இன்னும் யானை பார்த்த குருடர்களாகவே நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்கின்றனர்.

தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளம் தேவை. அது அரசியற்போராட்டமாக இருந்தாலும். அந்தத் தளம் என்பது பலமாக இருக்க வேணும். அந்தப்பலம் என்பது மக்கள் ஆரோக்கியமாக இருப்பதிலேயே அமைகிறது. இந்த ஆரோக்கியம் பல வகையில் அமையும்.

ஒன்று உடல் ஆரோக்கியம்.
அடுத்தது, வாழ்க்கையின் ஆரோக்கியம்.
மற்றது உள ஆரோக்கியம்.
அடுத்தது, சிந்தனை ஆரோக்கியம்.
இப்படி எல்லாத் தளங்களிலும் ஆரோக்கியமான நிலைமை இருக்கும் போது அல்லது ஏற்படும் போது அந்தப் போராட்டம், அந்த மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவர். இல்லையென்றால், பின்னடைவுகளும் தோல்விகளுமே சாத்தியமாகும்.

சுவலைத் தனங்களுடன் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள முடியாது. இது வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லித்தரும் பாடமாகும். ஏதோ ஒரு நிலையில் ஆரோக்கியக் குறைபாடிருந்தாலும் அந்தச் சமூகத்தினால் முன்னேறவோ வெற்றியடையவோ முடியாது. ஆகையால், அரசியலாளர்களும் கல்விமான்களும் ஊடகங்களும் எப்போதும் மக்களை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்க உழைத்துக் கொண்டிருப்பது அவசியமாகும்.

இந்த முயற்சிக்கு

புலம் பெயர் நாடுகளில், ஈழத்தமிழரின் அரசியலைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் தரப்புகளும் சரி எல்லாமுமே புண்ணிருக்கும் இடத்தை விட்டு விட்டு வேறிடத்துக்கு மருந்து போடுவதிலேயே அக்கறைப்படுகின்றன. காயத்திலிருந்த இரத்தம் பெருக்கெடுக்கிறது. அதைக் கட்டுப்படுத்தி, மருந்து போட்டு ஆளைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ஆளுக்குப் புரியாணிகொடுப்பதா, பட்டுச் சட்டை போட்டு அழகு பார்ப்பதா என்றே சிந்திக்கப்படுகிறது.

இந்த அரங்கம், அல்லது அரங்கத்துக்கு வெளியே இருக்கும் தரப்புகள் எவையாவது, எப்போதாவது இந்த பாதிக்கப்பட்ட மக்களின் மையத்திலிருந்து பிரச்சினைகளைப் பார்க்கின்றனவா?

பிரச்சினைகளைப் பேசுகின்றனவா?

இந்த மக்களின் அருகிலிருந்து கவனயீர்ப்புக்காகவாவது ஒரு ஊடகவியலாளர் சந்திப்பையாவது நடத்தியிருக்கின்றனவா?
போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் பற்றி ஒவ்வொருவருக்கும் அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் என்பதும் அவர்களுடைய பிரச்சினைகள் என்பதும் போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளுக்கு அப்பாலானது. அது அரசாங்கத்திலிருந்து அனைவருக்கும் பொதுவானது. ஏப்போதும் பிரச்சினைகளையும் பொறுப்புகளையும் மற்றவர்களின் மீது தள்ளிவிடும் ஒரு போக்கு தமிழில் தீவிரமாக வளர்ச்சியடைந்து விட்டது.

இதிலும் சகல தரப்பினரும் அடங்குகின்றனர். நேரடியாக அரசியலில் ஈடுபடுவோரும் சரி, நேரடியாக இல்லாமல் பின்னணியில் நின்று இயங்குவோரும் சரி இதில் சேர்ந்து கொள்வர். இது ஒரு உளவியற்பிரச்சினையும் அரசியற் தந்திரமுமாகும்.

ஆனால், இந்தத்தந்திரம் இவர்களைத் தனிப்பட்ட முறையில் ஒரு எல்லைவரை காப்பாற்றலாம். ஒருகட்டம் வரையில் இவர்களை முதன்மைப்படுத்தக்கூடும்.

ஆனால், மக்களுக்கு இதனால், ஒரு போதுமே எந்தப் பிரயோசனமும் கிட்டிவிடாது. அதேவேளை ஒடுக்கும் அரசுக்கும் அதன் அதிகார வர்க்கத்துக்கும் இது அதிகவாய்ப்பைக் கொடுக்கிறது. இதுதான் இதுவரையிலும் நடந்து வந்ததுமாகும். இப்போது தொடர்வதுமாகும்.

ஆகவே, இப்போதிருக்கும் முதலுதவிப் பணியை யார் முன்வந்து செய்கின்றனரோ அவர்களுக்கே மக்களிடம் இடம் கிடைக்கும்.

வரலாற்றிலும் அவர்களுக்கே வாய்ப்புகள் கிட்டும்.

மக்களிடம் எந்தத் தரப்புக்கு இடமிருக்கிறதோ அந்தத்தரப்புக்கே வரலாற்றிடமும் இடமிருக்கும்.

முதலுதவிப் பணியை விரிவாக்கம் செய்து உலகத்தில் இருக்கின்ற தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம்.

ஆனால், அது அரசியல் என்பதற்குப் பதிலாக மேலான மனிதாபிமானப் பணி என்ற வகையில் தொடங்கப்படுவதே சிறப்பு.

எந்த அரசியல் முன்னெடுப்பும் மேலான மனிதாபிமான எண்ணங்களிலிருந்தும் மேன்மையான மனிதாபிமானப் பணியிலிருந்தும் உயர்ந்த மனிதாய நோக்கிலிருந்துமே உருவாகிறது.

அது இல்லாத போது அது எத்தனை விதமான முயற்சிகளை எடுத்தாலும் வெற்றியடையாது.

வரலாற்றில் இதற்கும் ஏராளம் முன்னுதாரணங்கள் உண்டு. ஏன், எங்களிடமும் இதற்கு அனுபவங்கள் இருக்கின்றன.

ஆகவே, முதலில் தாகத்துக்குத் தண்ணீர் கொடுக்கும் பணியை – முதலுதவி அரசியலை – தமிழ் அரசியலில் ஆரம்பிப்போம்.

கட்டுரையாளர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் இன்போதமிழ் குழுமம்

No comments: